சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில், பிரட்ஸ் ரோட்டில் உள்ள அரசு கால்நடை மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், நாய், பூனை உள்ளிட்ட செல்லப்பிராணிகளுக்கும், ஆடு, மாடு போன்ற கால்நடைகளுக்கும் பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகின்றன.
மேலும், புதிய மருத்துவத் தொழில் நுட்பங்கள் மூலம் நோய் தடுப்பு சிகிச்சைகளும் இங்கே அரசு மருத்துவர்களால் அளிக்கப்படுகின்றன. இங்கு, நாள்தோறும் சுமார் 120 செல்லப்பிராணிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இந்நிலையில், இன்று தமிழ்நாட்டிலேயே முதல் முயற்சியாக வளர்ப்பு பெண் நாய்களுக்கு, மயக்க மருந்து செலுத்தாமல் மயக்க வாயு செலுத்தி கருத்தடை அறுவை சிகிச்சை செய்து அரசு கால்நடை மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
சேவோஃப்ளூரேன் (Sevoflurane) என்னும் மயக்க வாயுவை வளர்ப்பு நாயின் சுவாசம் மூலம் செலுத்தி, மயக்கமடையச் செய்து, கால்நடை பராமரிப்புத் துறை சேலம் மண்டல இணை இயக்குநர் மருத்துவர். புருஷோத்தமன் தலைமையிலான குழுவினர் வெற்றிகரமாக கருத்தடை செய்து சாதனை படைத்துள்ளனர்.
மயக்க மருந்து செலுத்தி வளர்ப்பு பெண் நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்வதைக் காட்டிலும், மயக்க வாயு செலுத்தி கருத்தடை அறுவை சிகிச்சை செய்வது பாதுகாப்பானது என்று மருத்துவக் குழுவினர் தெரிவித்தனர்.