கரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் தொற்றைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சேலம் மாநகரில் உள்ள மளிகைக்கடைகள் காலை 9 மணிமுதல் மாலை 4 மணிவரை மட்டுமே திறந்திருக்கும் என்றும் இந்த நடவடிக்கைக்கு வாடிக்கையாளர்கள், பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் சேலம் நகர அனைத்து வணிகர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜெயசீலன் வேண்டுகோள்விடுத்துள்ளார்.
இது தொடர்பாக ஜெயசீலன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், "கரோனா நோய்த்தொற்றைத் தடுக்கும் நடவடிக்கையில் சேலம் மாவட்ட நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
இதனையடுத்து மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு கொடுக்க சேலம் மாநகர அனைத்து வணிகர்கள் சங்கம் முடிவெடுத்துள்ளது. இதன்படி, நாளை (ஜூன் 24) காலை 9 மணிமுதல் மாலை 4 மணிவரை மட்டுமே சேலத்தில் உள்ள அனைத்து மளிகைக் கடைகளும் திறந்திருக்கும்.
சேலம் மாநகர எல்லைக்குள் இருக்கும் சில்லறை வணிகக் கடைகள், இரும்புக் கம்பி வணிகக் கடைகள், சேலம் வெள்ளிக் கடைகள், பட்டு விற்பனை நிலையங்கள், ஸ்டேஷனரி உள்ளிட்ட எழுதுப்பொருள் கடைகளின் மூடும் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
எனவே நாளைமுதல் வாடிக்கையாளர்களும் பொதுமக்களும் காலை 9 மணிமுதல் மாலை 4 மணிவரை தங்களுக்குத் தேவையான அத்தியாவசிய பொருள்களை வழக்கம்போல் தகுந்த இடைவெளியைக் கடைப்பிடித்து கடைகளில் வாங்கிக் கொள்ளலாம்" என்றார்.
இதையும் படிங்க... கூடுதல் நேரம் பொருள் விற்பனை - மளிகைக் கடைக்கு சீல்!