சேலம்: சேலம் மாவட்டம் மேட்டூர் அருகிலுள்ள ஜலகண்டபுரத்தைச் சேர்ந்தவர்கள் வெங்கடேசன், பழனியம்மாள் தம்பதியினர். இவர்களுக்கு ஒன்றரை வயதில் பிரதீப் என்ற ஆண் குழந்தை உள்ளது. ஒரு வாரத்திற்கு முன்பு குழந்தை பிரதீப் வீட்டினுள்ளே விளையாடிக்கொண்டிருக்கையில், கையில் கிடைத்த நிலக்கடலையை வாயில் போட்டு விழுங்கியிருக்கிறான்.
அப்போது, அந்த நிலக்கடலை குழந்தையின் சுவாசக்குழாயில் அடைத்துக்கொண்டுள்ளது. இதையடுத்து மூச்சுவிட சிரமப்பட்டு பிரதீப் அழுவதைக் கண்ட பெற்றோர் சேலம் அரசு மருத்துவமனையின் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
அங்கு குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தையின் சுவாசக்குழாயில் அடைப்பு இருப்பதைக் கண்டுபிடித்தனர். தொடர்ந்து, சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் காது மூக்கு தொண்டை பிரிவின் தலைமை மருத்துவர் கிருத்திகா, தனது மருத்துவக் குழுவினரின் உதவியுடன் அதிநவீன டெலி ப்ராங்கோஸ்கோபி கருவி மூலம் குழந்தையின் சுவாச குழாயில் அடைத்திருக்கும் நிலக்கடலையை அகற்றினர்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய காது மூக்கு தொண்டைப் பிரிவின் துறைத் தலைவர் மருத்துவர் கிருஷ்ணசுந்தரி, சேலம் அரசு மருத்துவமனையில், சுமார் 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள அதிநவீன டெலி ப்ராங்கோஸ் கோபி கருவி பயன்பாட்டில் உள்ளதாகவும், இதன்மூலம் குழந்தைகள் சுவாச குழாய்களில் ஏற்படும் அடைப்புகளை அகற்றிவிட முடியும் என்றும் தெரிவித்தார்.
மேலும், தனியார் மருத்துவமனையில் ஐந்து அல்லது ஆறு லட்சம் ரூபாய் செலவில் வழங்கப்படும். இந்தச் சிகிச்சை அரசு மருத்துவமனைகளில் இலவசமாக வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பெண்ணின் நெஞ்சுக்கூட்டில் அரியவகை கட்டியை அகற்றி சேலம் அரசு மருத்துவர்கள் சாதனை