தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சென்னையிலிருந்து விமானம் மூலம் இன்று காலை சேலம் விமான நிலையம் வந்தடைகிறார். அங்கு அவருக்கு அதிமுக சேலம் மாநகர மாவட்டச் செயலாளர் எம்எல்ஏ ஜி. வெங்கடாசலம் தலைமையில், கட்சியினர் வரவேற்பு அளிக்கின்றனர்.
பின்னர் சேலம் ஐந்து ரோடு பகுதியில் புதியதாக கட்டப்பட்டுள்ள அகர்வால் கண் மருத்துவமனையின் புதிய கிளையை முதலமைச்சர் திறந்துவைக்கிறார்.
அதன்பிறகு, கார் மூலம் கரூர் மாவட்டம் செல்லும் முதலமைச்சர், அங்கு அரசு நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார். கரூர் நிகழ்ச்சியை முடித்துவிட்டு சேலம் திரும்பும் முதலமைச்சர், மணியனூரில் அமைக்கப்பட்டுள்ள 'அம்மா மினி கிளினிக்'கை தொடங்கிவைக்கிறார்.
பின்னர் டிசம்பர் 17ஆம் தேதி கார் மூலம் ஆத்தூர் வழியாக அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் நடைபெறும் ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு இரவு சேலம் திரும்புகிறார்.
தொடர்ந்து டிசம்பர் 18ஆம் தேதி கொங்கணாபுரம், எடப்பாடியில் நடைபெறும் அரசு மற்றும் தனியார் நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். அதன்பிறகு 19ஆம் தேதி பெரிய சோரகை, சிலுவம்பாளையம் பகுதிகளில் அம்மா மினி கிளினிக்குகளைத் திறந்துவைக்கிறார். தொடர்ந்து, ஓமலூர் அதிமுக அலுவலகத்தில் தகவல் தொழில்நுட்பப் பிரிவினருடன் ஆலோசனை நடத்துகிறார்.
பின்னர் 20ஆம் தேதி காலை ஓமலூர் விமான நிலையம் செல்லும் முதலமைச்சர், அங்கிருந்து விமானம் மூலம் சென்னை புறப்பட்டுச் செல்வார் என முதலமைச்சர் அலுவலக வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. முதலமைச்சரின் வருகையை ஒட்டி சேலம் மாவட்டத்தில் காவல் துறையினர் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர்.