சேலம் மாவட்டம் ஊத்துக்காடு பகுதியில் குணசேகரன் என்பவருக்குச் சொந்தமான இரும்பு கடையில் சுபாஷ் நகரைச் சேர்ந்த ராமசாமி (70) இரவு நேர காவலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார்.
நவம்பர் 14ஆம் தேதி இரவு, இரும்புக் கடையில் வைத்து ராமசாமியை அடையாளம் தெரியாத நபர்கள் அரிவாளால் வெட்டி கொடூரமாக கொலை செய்தனர். ராமசாமி படுகொலை செய்யப்பட்டு ரத்தவெள்ளத்தில் இருப்பதைக் கண்ட கடை ஊழியர் அன்னதானப்பட்டி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர், ராமசாமியின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர், குற்றவாளி யார் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
ராமசாமியின் தொலைபேசிக்கு வந்த அழைப்புகளை வைத்து முதற்கட்ட விசாரணையை காவல் துறையினர் தொடங்கினர். அதில், கடைசியாக ராமசாமியின் இரண்டாவது மனைவி சாந்தியின் மூத்த மகன் பிரதாப் அழைத்திருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து பிராதாப்பிடம் காவல் துறையினர் விசாரணை செய்ததில் அவர் முன்னுக்குப் பின் முறனாக பதிலளித்துள்ளார். இதனால், சந்தேகமடைந்த காவல் துறையினர் அவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அப்போது தான் அந்த திடுக்கிடும் தகவல் வெளிவந்தது.
சொத்துப் பிரச்னைக்காக தனது நண்பர்கள் பிரபு, ரகுமான் ஆகியோர்களுடன் சேர்ந்து தந்தையை அறிவாளால் கொடூரமாக வெட்டிக் கொன்றதாக வாக்குமூலம் கொடுத்துள்ளார். சுபாஷ் நகரில் ராமசாமிக்குச் சொந்தமான வீடு ஒன்று இருந்ததாகவும் அதனை தனது தம்பியின் பெயரில் எழுதி வைத்துவிட்டதாகவும் ராசிபுரத்தில் உள்ள ஆறு ஏக்கர் நிலத்தை முதல் மனைவியின் வாரிசுகளுக்கு எழுதிவைத்து விட்டதாகவும் தெரிவித்தார்.
ராமசாமியின் இரண்டாவது மனைவியின் மகன் தனக்கு சொத்துகள் ஏதும் எழுதி கொடுக்காத ஆத்திரத்தில் தனது நண்பர்களுடன் சேர்ந்து தந்தையை தீர்துக்கட்டியதாகவும் தெரிவித்தார். பின்பு, காவல் துறையினர் பிரதாப்புடன் சேர்ந்து ராமசாமியை கொலை செய்த அவரது நண்பர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மத்திய சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: '6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவர்களை கைது செய்க'