சேலம்: அதிமுக பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற பின்னர் முதல் முறையாக தனது சொந்த தொகுதியான எடப்பாடிக்கு சென்ற எடப்பாடி கே.பழனிசாமிக்கு கொங்கணாபுரம் ஒன்றிய அதிமுக சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி, 1989 சேவல் சின்னத்தில் வெற்றி பெற்றதாகவும், 1998இல் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டதாகவும், 2011இல் நெடுஞ்சாலை அமைச்சராக பொறுபேற்று இருந்ததாகவும் கூறினார்.
2016இல் கூடுதலாக பொதுப்பணிதுறையை ஜெயலலிதா வழங்கியதாகவும், 100 ஏரி நிரப்பும் திட்டத்தை கொண்டு வந்தது கிடப்பில் உள்ளதாகவும், எடப்பாடி, கொங்கணாபுரம், மகுடஞ்சாவடி ஆகிய 3 ஊராட்சிகளுக்கும் கூட்டு குடிநீர் திட்டம், எட்டி குட்டை மேடு பகுதியில் சிட்கோ தொழில் பேட்டை ஆகியவற்றை ஏற்படுத்தியதாகவும் கூறினார்.
இந்த நிலையில், திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின்பு, எடப்பாடி தொகுதியில் ஒரு துரும்பைக் கூட கிள்ளி போடவில்லை என்றும் சிறுசிறு பணிகளை மட்டும் செய்துவிட்டு தேர்தல் அறிவிப்புகள் நிறைவேற்றப்பட்டதாக ஆளும் கட்சியினர் கொக்கரிப்பதாக குற்றம் சாட்டினார்.
தினமும் கொலை, கொள்ளை, வழிப்பறி, நகை பறிப்பு நடப்பதாகவும், இதனிடையே சமீபத்தில் மணல் கொள்ளையை தடுத்த கிராம நிர்வாக அலுவலரே வெட்டிக் கொல்லப்பட்டார் என்றும் தெரிவித்தார். இவ்வாறு தமிழ்நாடே கொலைக் களமாக மாறி விட்டதாக சாடினார்.
அதிமுக ஆட்சியில் குறிப்பிட்ட நேரத்துக்கு தான் மது விற்பனை செய்யப்பட்ட நிலையில் திருமண மண்டபம், விளையாட்டு மைதானம் ஆகிய இடங்களில் மதுபானம் விற்கலாம் என்பதாகவும், தற்போது 24 மணி நேரமும் மது விற்பனை செய்வதோடு இந்த அரசாங்கம் மாணவர்களை போதைக்கு அடிமையாக்கி சீரழித்து வருவதை சிந்திக்காத முதலமைச்சர் என்றார்.
முப்பதாயிரம் கோடி ரூபாய் உதயநிதி மற்றும் சபரீசன் சம்பாதித்துள்ளதாக நிதியமைச்சரே கூறியிருப்பதாக கூறிய அவர், அனைத்து துறைகளிலும் ஊழல் தலை விரித்து ஆடுகிறது என்றார். எங்கு பார்த்தாலும் போதைப் பொருட்கள் விற்பனை சாதாரணம் ஆகியதால்தான், கொலை சம்பவங்கள் அரங்கேறி வருவதாகவும், இந்த அரசு இனியாவது கும்பகர்ண தூக்கத்திலிருந்து விழித்து கொண்டு மக்களை காக்க வேண்டும் என்றார்.
மேலும் பேசிய அவர், “ஏழைகளுக்காக வழங்கப்பட்ட முதியோர் உதவித் தொகையையும் நிறுத்தி ஏழை மக்களையும் வாட்டி வதைத்து வருகின்றது திமுக அரசு. அரசுப் பள்ளியில் படிக்கும் 41 சதவீத மாணவர்களில் 9 பேர்தான் மருத்துவம் படிக்க வாய்ப்பு பெற்ற நிலையில், 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கியதன் மூலம் 564 மாணவர்கள் மருத்துவம் படிக்கும் வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்தோம். மேலும், அவர்களுக்கு கல்வி கட்டணத்தையும் அரசே ஏற்கும் என்று அறிவித்தோம். அதிமுக பொதுச் செயலாளர் ஆனது உங்களால்தான். எப்போதும் உங்களுடன் பயணிப்பேன். உங்களுடைய சுக துக்கங்களில் பங்கெடுப்பேன்” எனப் பேசினார்.
இதனையடுத்து எடப்பாடி ஆய்வு மாளிகையில் எடப்பாடி நகர கழகம் சார்பிலான வரவேற்பை ஏற்றுக் கொண்ட எடப்பாடி பழனிசாமி, விழா மேடையில் சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர், திமுக ஆட்சியில் எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறி, பாலியல் தொல்லை சம்பவம் நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக சட்டப்பேரவையில் இரண்டு மணி நேரம் குரல் எழுப்பியும் அதனை வெளியிடவில்லை என்று ஆதங்கப்பட்டார்.
சட்டப்பேரவையில் நடக்கும் நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டும் என்று கோரி பலமுறை வெளிநடப்பு செய்ததாகவும், நேரடி ஒளிபரப்பு செய்வதில் முதலமைச்சருக்கு பயம் உள்ளது என சாடினார். திமுக ஆட்சிக்கு வந்த பின்பு, எந்த திட்டத்தையும் நிறைவேற்றாமல் மதுக்கடையை மட்டும் திறந்துள்ளதாகவும், அதிலும் போலி சரக்குகளே அதிகமாக உள்ளதாக சொல்வதாக தெரிவித்தார்.
இதையும் படிங்க: முதலமைச்சர் கள ஆய்வு: மாவட்ட அதிகாரிகள் அதிரடி மாற்றம்!