சேலம்: அயோத்தியாப்பட்டணம் பேரூராட்சியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசுகையில், "2021ஆம் ஆண்டு நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் நாம் சற்று சறுக்கிவிட்டோம். திமுக அரசு மீது மக்கள் கோபம் கொண்டு உள்ளனர்.
திமுக மீது மக்களுக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளது. இந்தத் தேர்தல் அதிமுகவுக்கு உள்ள சக்தியைக் காட்டும் தேர்தலாக இருக்கும். அதிமுக பிரமுகர்கள் மீது, திமுக அரசு பொய் வழக்குப்போட முயற்சிக்கிறது. திமுகவுக்கு தேர்தல் ஜூரம் வந்துவிட்டது. மக்களை சந்திக்கப் பயப்படுகிறார்கள்.
70 விழுக்காடு நிறைவேற்றப்பட்ட வாக்குறுதிகள்?
ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்ட கட்சி அதிமுக. அதிமுக ஆட்சியில் ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்தினோம். திமுக பல்வேறு முறைகேடுகள் செய்து வெற்றி பெற முயற்சிக்கின்றனர்.
மக்களுக்கு திமுக மீது நம்பிக்கை கிடையாது. 8 மாத ஆட்சிக்காலத்தில் திமுக மீது அதிருப்தி ஏற்பட்டுள்ளது. சட்டப்பேரவை தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளில் 70 விழுக்காடு நிறைவேற்றப்பட்டது என ஸ்டாலின் காணொலி பரப்புரையில் கூறுகிறார்.
அப்படி என்றால் அவரின் 517 வாக்குறுதிகளில், 400 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டன என அர்த்தம். ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. ஸ்டாலின் போல பதவி வெறிப்பிடித்தவர் நான் அல்ல, சாதாரண தொண்டன்.
அதிமுக ஆட்சியில் சாலைகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் 2ஆயிரத்து500 அம்மா மினி கிளினிக்குகள் திறந்தோம். ஏற்காடு சட்டப்பேரவைத் தொகுதியில் மட்டும், 11 இடங்களில் தொடங்கி வைத்தோம். வஞ்சகப் புத்தியுள்ள ஸ்டாலின் இதை மூடிவிட்டார்.
திமுகவை நம்பினால் இதுவே நிலை
அம்மா உணவகத்தை மூட ஸ்டாலின் முயற்சிக்கிறார். கரோனா காலத்தில் ஏழைகளுக்கு அம்மா உணவகம் மூலம் உணவளித்தோம். கரோனா காலத்தில் நிவாரணம் கொடுத்தோம். 10 மாத காலம் அம்மா உணவகம் மூலம் இலவச உணவு கொடுத்தோம்.
ஸ்டாலின் தேர்தல் அறிக்கையில் குடும்பத்தலைவிக்கு மாதம் ஆயிரம் ரூபாய் கொடுப்போம் எனக் கூறினார். அதனை நம்பி வாக்களித்த மக்களை அவர் ஏமாற்றிவிட்டார்.
கூட்டுறவு, பொதுத்துறை வங்கிகளில் பெற்ற கடனை தள்ளுபடி செய்வதாக அறிவிப்பு வெளியிட்டார். இப்போது கையை விரித்து விட்டார். 13 லட்சம் பேருக்குத்தான் நகைக்கடன் தள்ளுபடி, 35 லட்சம் பேருக்கு இல்லை. அவர்கள் நிர்கதியாக உள்ளனர். அவர்கள் அசல், வட்டி கட்டினால் மட்டுமே நகையை மீட்டெடுக்க முடியும். ஓட்டு போட்டிக்காக 12 ஆயிரம் ரூபாய் வட்டி கட்ட வேண்டும் என்ற நிலையில் உள்ளனர்.
திமுகவை நம்பினால் இதுதான் நிலைமை என்பதை மக்கள் புரிந்து வைத்துள்ளனர். அதிமுக ஆட்சியில் 52 லட்சம் பேருக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட்டன. கல்வி பெறுவோர் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. நாட்டிலேயே உயர் கல்வி படிப்போரில் தமிழ்நாடு முதலிடம் வகிக்கிறது. இதற்கு அதிமுக அரசு காரணம்.
திமுக அரசு என்ன செய்தது? நாங்கள் போட்டத்திட்டங்களை ஸ்டாலின் திறந்து வைத்து வருகிறார். அந்தப் பெருமை எங்களுக்குத்தான் சேரும். பொங்கல் பரிசு தரமில்லாத வகையில் வழங்கப்பட்டதை மக்கள் மறக்கமாட்டார்கள். நாங்கள் தரமான பரிசு கொடுத்தோம். திமுகவினர் 500 கோடி ரூபாய் ஊழல் செய்ய பொங்கல் பரிசு கொடுத்தார்கள்" என்றார்.
இதையும் படிங்க: தமிழ்நாடு காவல்துறையில் 90% அலுவலர்கள் ஊழல்வாதிகள் - உயர் நீதிமன்ற நீதிபதிகள் வேதனை