சேலம்: இதுகுறித்து புகழேந்தி செய்தியாளர்களுக்கு அளித்தப்பேட்டியில், “பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குரு பூஜை விழா ஆண்டு தோறும் நடைபெறும். சேலம், ஓசூர், நாமக்கல், ஈரோடு மாவட்டங்களில் நூற்றுக்கணக்கான வாகனங்களில் பேரணியாக செல்ல ஓ. பன்னீர்செல்வம் அறிவுறுத்தினார். அதன்படி செல்கிறோம். தென்மாவட்டங்களில் உள்ள மக்களை பார்த்தால் எடப்பாடி பழனிசாமி எதிரியை போல் நினைக்கிறார். பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் நடைபெறும் விழாவிற்கு ஈபிஎஸ் செல்லவில்லை.
முக்குலத்தோர் சமூகத்தை பார்த்தாலே எடப்பாடி பழனிசாமிக்கு பிடிக்கவில்லை. நாடாளுமன்றத் தேர்தலில் 39 இடங்களில் தோற்ற நிலையில் தேனி மக்களால் தான் அதிமுக ஒரு இடத்தில் வெற்றி பெற முடிந்தது. தென்தமிழகம் அதிமுகவின் கோட்டையாக உள்ளது. தென்தமிழகம் இல்லாமல் ஆட்சி அமைக்க முடியாது. வன்னியர் சமுதாயத்தினருக்கு 10.5 விழுக்காடு இட ஒதுக்கீடு அறிவித்து, தேர்தல் தோல்விக்கு காரணமாக இருந்தவர் ஈபிஎஸ் தான்.
அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி, மூத்த தலைவர்களை காவலர்கள் போன்று பயன்படுத்துகிறார். ஜெயலலிதாவால் ஒதுக்கி வைக்கப்பட்ட கே.பி.முனுசாமிக்கு அவரது மரணத்திற்கு பிறகு அரசியல் வாழ்க்கை வந்தது. அதற்கு ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு அளித்தார். ஆனால், இப்போது அவரையே அவதூறாக பேசி வருகிறார். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை தரைகுறைவாக பேசி வருகிறார். ஒருநாள் செய்தியாளர்கள் அனைவரும் புறக்கணிக்கும் போது அவருக்கு தெரியவரும்.
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் 13 பேர் சுடப்பட்டு உயிரிழந்தனர். அப்போது முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமியை கைது செய்து விலங்கு மாட்டி அழைத்து வரவேண்டும். கோவை கார் சிலிண்டர் வெடிவிபத்தின் விசாரணை ரகசியங்களை அண்ணாமலை பேசுவது குறித்து உள்துறை அமைச்சகம் தான் கேள்வி கேட்க வேண்டும். கொலை கொள்ளை சம்பவங்கள் ஈடுபடும் நபர்கள் தமிழ்நாட்டில் சுதந்திரமாக சுற்றி வருகிறார்கள். முதலமைச்சர் கவனம் செலுத்தி கைது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
அதிமுக சிதறி போகாமல் இருக்க எடப்பாடி பழனிசாமி அழைத்தால் ஓபிஎஸ் அவருடன் சேர்ந்து கொள்வார். அண்ணாமலை இருந்தால் தமிழ்நாட்டில் பாஜக வளராது. அண்ணாமலையை மாற்றினாலேயே பாஜகவிற்கு எதிர்காலம் உள்ளது” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 115ஆவது ஜெயந்தி விழா