முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்காக தண்ணீரைத் திறந்து வைத்தார். பின்னர் மக்களிடையே பேசிய அவர்," விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று அணை திறக்கப்பட்டுள்ளது. அணையில் நீர் மட்டம் முழு கொள்ளளவான 120 அடியை எட்டும் என்று எதிர்பார்க்கிறேன். ஜெயலலிதா அருள் ஆசியுடன் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
சேலம், நாமக்கல், கரூர், திருச்சி உள்ளிட்ட 12 மாவட்டங்களைச் சேர்ந்த 16.05 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் இதன் மூலம் பயன்பெறும். மேலும் குடிமராமத்துப் பணிகள் முழுவதும் விவசாயிகளின் பங்களிப்புடன் நடைபெறுகிறது. இதன் மூலம் பருவமழைக் காலங்களில் பெய்யக்கூடிய மழைநீரானது வீணாகக் கடலில் கலக்காமல் பாசனத்திற்கு பயன்படுத்தப்படும்.
சொட்டு நீர் பாசனம் குறித்த விழிப்புணர்வை விவசாயிகளுக்கு ஏற்படுத்திவருகிறோம். விவசாயிகளுக்கு தேவையான இடுபொருள்கள் அனைத்தும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. அணையில் படிந்துள்ள வண்டல் மண்ணை விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கிவருகிறோம்.
இதன் மூலம் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் பயனடைந்துள்ளனர். காவிரி - கோதாவரி நதிநீர் இணைப்பு திட்டத்தை மத்திய அரசு பரிசீலனை செய்வதாக அறிவித்துள்ளது. விவசாயிகளுக்கு தேவையான அனைத்து திட்டங்களையும் இந்த அரசு நிறைவேற்றும்" என்றார்.