சேலம்: சேலம் மாவட்டம், வாழப்பாடி அடுத்த அப்பமசமுத்திரம் அருகே உள்ள ராமநாயகன் பாளையம் காரமடை திட்டு பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் கண்ணையன், கிருஷ்ணன். இவர்களின் நிலத்தை அபகரிக்கும் நோக்கில், பாஜகவின் இலக்கிய அணி சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளர் குணசேகரன் என்பவர் தொடர்ந்து முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது. அதோடு, இதற்காக பல்வேறு அச்சுறுத்தல்களையும், கொலை மிரட்டல்களையும் விவசாயிகளுக்கு விடுத்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
இது தொடர்பாக ஆத்தூர் காவல்நிலையத்திலும், நீதிமன்றத்திலும் வழக்குகளும் உள்ளன. இதற்கிடையே தான், இவர்களுக்கு சில மாதங்களுக்கு முன்பு அமலாக்கத்துறையில் இருந்து சம்மன் கடிதம் ஒன்று வந்துள்ளது. இதைத் தொடர்ந்து, சென்னைக்கு சென்று அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகி உள்ளனர்.
இது குறித்து விவசாயிகள் கண்ணையன் மற்றும் கிருஷ்ணன் ஆகியோர் கூறுகையில், 'எங்களுக்கு பூர்வீகமாக ஆறரை ஏக்கர் விவசாய நிலம் இந்தப் பகுதியில் உள்ளது. இதன் அருகில் விளைநிலம் வைத்துள்ள பாஜக பிரமுகர், எங்களை நிலத்தை அவரிடம் விற்றுவிட்டு ஓடிவிடுமாறு தொல்லை கொடுத்து மிரட்டல் விடுத்து வருகிறார்.
விவசாயம் செய்ய முடியாத நிலைக்குத் தள்ளி, எங்களோடு அராஜகத்தில் ஈடுபடுகிறார். இது தொடர்பாக சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் காவல் நிலையங்களில் பல்வேறு முறை புகார் கொடுத்தும், எந்த பலனும் இல்லை.
எனவே, அவர் மீது நடவடிக்கை எடுத்து எங்களை பாதுகாக்க வேண்டும். மேலும், அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனில் எங்களது சாதிப்பெயரைக் குறிப்பிட்டு இழிவுபடுத்தும் வகையில் குறிப்பிட்டுள்ளனர். இது தொடர்பாகவும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். சாப்பாட்டிற்கே வழியில்லாத எங்களுக்கு சொத்து குவித்துள்ளதாகவும், பணம் வைத்துள்ளதாகவும் நோட்டீஸ் வழங்கியுள்ளது வேடிக்கையாக இருக்கிறது' என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: ஆரணி அருகே குட்டையைக் காணவில்லை என விவசாயிகள் குற்றச்சாட்டு..! முதலமைச்சர் தனிப்பிரிவில் புகாரளித்தும் நடவடிக்கை இல்லாததால் வருத்தம்!