சேலம்: சேலம் மாநகர் பழைய பேருந்து நிலையம் அடுத்த சாந்தி தியேட்டர் அருகே தமிழ்நாடு அரசின் டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இந்த டாஸ்மாக் மதுபான கடையை ஒட்டி குடிப்பகம் (பார்) ஒன்றும் செயல்பட்டு வருகிறது. இந்தக் குடிப்பகம் 24 மணி நேரமும் சுறுசுறுப்பாக இயங்கி வருவதால், எப்போதும் இந்தப் பகுதியில் மதுப்பிரியர்களின் கூட்டம் அலைமோதும்.
இதனால், அந்தப் பகுதியில் உள்ள குடியிருப்புவாசிகள், வணிக நிறுவனத்தினர் பலமுறை காவல்துறையினருக்கு புகார் தெரிவித்தும் மது விற்பனையை அரசு அனுமதித்த நேரத்தில் விற்பதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
மேலும் டாஸ்மாக் மதுபானக் கடையை பூட்டிய பிறகும், பாரில் இருந்து சட்டவிரோதமாக மதுபான விற்பனை படுஜோராக செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், நேற்றிரவும் (ஏப்.22) வழக்கம்போல், மது விற்பனை செய்யப்பட்டு உள்ளது. இதனைத்தொடர்ந்து இன்று அதிகாலை 5 மணி முதலே மது பாட்டில்கள் பரபரப்பாக விற்பனை செய்யப்படுவதை அறிந்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஒருகட்டத்தில், சட்ட விரோதமாக மது விற்பனை நடத்திய பாரை, குடிமகன்களுடன் உள்ளே வைத்து பூட்டுப்போட்டு மூடினர். அப்போது விதிமுறைகளை மீறி அதிக நேரம் செயல்பட்ட டாஸ்மாக் நிர்வாகம், அவற்றை தடுக்க தவறிய மாநகர காவல்துறை, தமிழ்நாடு அரசு ஆகியவற்றிற்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷங்களை எழுப்பினர். ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடந்த போராட்டத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதனிடையே, டாஸ்மாக்கிற்கு பூட்டுப்போடும் போராட்டம் நடந்தபோதும், அதன் மிக அருகில் இருந்த காவல் நிலையத்திலிருந்து ஒரு காவலர் கூட அங்கு வரவில்லை எனக் கூறப்படுகிறது. விடிய விடிய சட்ட விரோதமாக மது விற்பனை நடைபெறுவதை காவல்துறையினர் தடுக்கவில்லை என்று பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர், 'மது விற்பனை செய்யும் நபர்கள் மீது காவலர்கள் நடவடிக்கை எடுப்பதில்லை. காவலர்கள் கையூட்டு பெற்றுக் கொண்டு சட்டவிரோத மது விற்பனைக்கு துணை போகிறார்கள். அரசு அனுமதித்த நேரத்தைத் தாண்டியும் மது விற்பனை நடந்து வருவது அதிர்ச்சியைத் தருகிறது. எனவே, சேலத்தில் நடைபெறும் சட்டவிரோத மது விற்பனையை காவல்துறை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று வலியுறுத்தினர்.
பல மணி நேரம் கழித்து சாவகாசமாக சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் போராட்டக்காரர்களிடம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் உறுதி அளித்ததைத் தொடர்ந்து, போராட்டம் கைவிடப்பட்டது. இதனால், உள்ளே வைத்து பூட்டப்பட்டிருந்த குடிமகன்கள் ஒருமணி நேரத்திற்குப் பின்னர், வெளியே விடப்பட்டனர். இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் நடத்திய இந்தப் போராட்டத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: Exclusive: மதுரை திருவேடகம் கோயிலில் தங்க ஏடு கண்டெடுப்பு!