மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்தும், டெல்லியில் போராடும் வடமாநில விவசாயிகளுக்கு ஆதரவாகவும் சேலம் எஸ்ஆர்பி மைதானத்தில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிடப்பட்டது. இதில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கலந்து கொள்வதாக அறிவிப்புகள் வெளியாகின.
இதற்காக தலை வாசல், ஆத்தூர், வாழப்பாடி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 50க்கும் மேற்பட்ட வாகனங்களில் திமுக தொண்டர்கள் வந்தனர். அப்போது அவர்களை சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர்.
இதனால் திமுக தொண்டர்கள் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக சுமார் 7 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதையடுத்து காவல் துறையினர் போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதற்கு அவர்கள் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் சம்பவ இடத்திற்கு வந்தால் மட்டுமே கலைந்து செல்வதாக காவல் துறையினரிடம் தெரிவித்தனர்.
பின்னர் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் சம்பவ இடத்திற்கு வந்த பிறகே போராட்டம் கைவிடப்பட்டது. திமுகவினரின் போராட்டத்தால் சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதையும் படிங்க: ஏர் கலப்பை பேரணி நடத்த முயன்ற காங்கிரசார் கைது!