சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத் துறையின் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு அதிநவீன சக்கர நாற்காலிகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சி.அ. ராமன் தலைமையேற்று தசைச்சிதைவு, முதுகுத்தண்டுவட பாதிப்பால் கால்கள் செயலிழந்த 10 மாற்றுத்திறனாளிகளுக்கு மின்கலத்தால் இயங்கும் அதிநவீன சக்கர நாற்காலிகளை வழங்கினார்.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் கூறுகையில், "தமிழ்நாடு முதலமைச்சர் 08.08.2020 அன்று சேலம் மாவட்டத்தில் தசைச்சிதைவு நோய் அல்லது பக்கவாதத்தால் கை, கால் பாதிக்கப்பட்ட 2 மாற்றுத்திறனாளிகளுக்கு மின்கலத்தால் இயங்கும் சக்கர நாற்காலிகள் வழங்கி தொடங்கிவைத்தார். அதனைத்தொடர்ந்து தசைச்சிதைவு, முதுகுத்தண்டுவட பாதிப்பால் கால்கள் செயலிழந்த 34 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது.
மேலும், இன்றைய தினம் கால்கள் செயலிழந்த 10 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா 99 ஆயிரத்து 999 ரூபாய் வீதம் 9 லட்சத்து 99 ஆயிரத்து 990 ரூபாய் மதிப்பிலான மின்கலத்தால் இயங்கும் அதிநவீன சக்கர நாற்காலிகள் வழங்கப்பட்டுள்ளன.
மாற்றுத்திறனாளிகள் மிகச் சுலபமாக வீட்டினுள்ளும், சாலைகளிலும் அதிக தூரம் பயணம் செய்வதற்கு வசதியாகவும், சாய்வு தளங்களில் சுலபமாக ஏறுவதற்கு வசதியாகவும், 125 கிலோ கிராம் எடையை தாங்கக்கூடிய அளவிலும், பயனாளிகளின் பயன்பாட்டிற்கு ஏற்ப தேவையான மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தை தசைச்சிதைவு, முதுகுத்தண்டுவட பாதிப்பால் கால்கள் செயலிழந்த மாற்றுத்திறனாளிகள் மின்கலத்தால் இயங்கும் அதிநவீன சக்கர நாற்காலிகளை பெற்று பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன்" என்று தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஸ்ரீநாத், உடலியல் மற்றும் புனர் வாழ்வு மருத்துவர் பி. பத்மபிரியா உள்பட அலுவலர்கள் கலந்துகொண்டனர்.