சேலம் மாவட்டம், பெரியபுதூர் பகுதியைச் சேர்ந்தவர் பாப்பாத்தி. இவர் சேலம் அன்னதானப்பட்டி பகுதியில் உள்ள தனியார் மாவு மில்லில் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் மாவு மில் உரிமையாளர் ரவிக்கும், பாப்பாத்திக்கும் இடையில் தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது.
இச்சூழலில் இரண்டு நாட்களாக பாப்பாத்தி வீடு திரும்பாததால், உறவினர்கள் அவர் பணியாற்றும் மாவு மில்லுக்கு வந்து பார்த்தபோது, மில்லின் அருகே உள்ள அறையில் துர்நாற்றம் வீசுவது கண்டு காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
அதனடிப்படையில், சம்பவ இடத்திற்கு வந்த அன்னதானப்பட்டி காவல்துறையினர், அந்த அறையை திறந்து பார்த்தபோது பாப்பாத்தி உடல் அழுகிய நிலையில் சடலமாக இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர் சடலத்தை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு காவல்துறையினர் அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து மாவு மில் உரிமையாளரிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.