சேலம்: தர்மபுரி மாவட்டம், தொப்பூர் அருகே ஜருகு என்ற பகுதியைச் சேர்ந்த ரங்கநாதன் - அமுதா தம்பதியருக்குக் கடந்த 1996ஆம் ஆண்டு முதலில் ஒரு பெண் குழந்தை பிறந்தது.
பின்பு பல ஆண்டுகள் கழித்து மீண்டும் பெண்குழந்தை பிறந்துள்ளது. இதனிடையே ரங்கநாதன் வேலைக்குச் செல்லாமல் இருந்துள்ளார்.
தத்துக் கொடுக்கப்பட்ட மகள்
இதனால் அவரின் மனைவி அமுதாவால், இரண்டு பெண்குழந்தைகளையும் பாதுகாப்பாக வளர்க்க முடியாது என எண்ணி இரண்டாவதாக பிறந்த பெண்குழந்தையை சேலம் அரசு மருத்துவமனையில் கிறிஸ்தவ மிஷினரி நிறுவனத்திற்கு, தத்து கொடுத்துவிட்டார்.
அதன் பின்னர் அக்குழந்தை அந்தத் தனியார் கிறிஸ்தவ மிஷினரி நிறுவனத்தினரின் பாதுகாப்பில் வளர்ந்து வந்தது.
இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன் உடல்நலக் குறைவால் ரங்கநாதன் இறந்துவிட்டார். இதனிடையே,சேலத்தில் வளர்ந்த பெண் குழந்தையை, நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த போய்ட் (piet) – அகீதா (ageeth)தம்பதியர் , தத்து எடுத்து அந்தப்பெண் குழந்தைக்கு அமுதவல்லி என்று பெயர் சூட்டி , நெதர்லாந்திலேயே வளர்த்து வந்துள்ளனர்.
இந்நிலையில், 23 வயதைக் கடந்த அமுதவல்லி, அம்மா மற்றும் அப்பா நன்கு சிகப்பாக உள்ளார்கள். தான் மட்டும் மாநிறமாக இருக்கும் காரணத்தை அறிய முற்பட்டார்.
மேலும், அதே நெதர்லாந்து தாய் தந்தைக்கு பிறந்திருக்கும் தங்கையும் சிகப்பாக உள்ளார் என சந்தேகப்பட்டு பெற்றோரிடம் விளக்கம் கேட்டுள்ளார்.
23 ஆண்டுகள் இழந்ததை மீட்கப் பாசப் பயணம்
அமுதவல்லியின் தொடர் கேள்விகளைத் தாங்க முடியாமல், தவித்த நெதர்லாந்து பெற்றோர் அமுதவல்லியைத் தமிழ்நாட்டில் தாங்கள் தத்து எடுத்து வந்து, தங்கள் உடனே வளர்த்து வருவதாக பதிலளித்துள்ளனர்.
இதனையடுத்து அவர் தன்னைப் பெற்றெடுத்த தாயைக் காண ஆவலுடன் பலமுறை தனது வளர்ப்பு பெற்றோரிடம் வேண்டுகோள் வைத்துள்ளார்.
ஒருவழியாக வளர்ப்பு பெற்றோர்கள் சம்மதத்துடன் அமுதவல்லி இந்தியாவிற்கு வந்துள்ளார். முதலில் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தனது தந்தை ஊரான ஜருகுக்கு சென்றுள்ளார்.
அப்போது அங்கு அப்பா இறந்து விட்டார் என்று அறிந்து துடித்துப் போயிருக்கிறார். பின்னர் அங்குள்ள உறவினர்கள் சிலர், 'உனது அம்மா பாட்டி வீடான சேலம் மாவட்டம், காடையாம்பட்டி அருகேயுள்ள பூசாரிப்பட்டி இந்திரா நகர் பகுதியில் வசித்து வருகிறார்' என்று தெரிவித்துள்ளனர்.
பாசத்திற்கும் பாஷை உண்டோ..?
இதனையடுத்து பூசாரிப்பட்டிக்கு இன்று(ஜன 28) வந்த அமுதவல்லியைக் கண்ட, அவரின் பெற்ற தாய் மற்றும் உறவினர்கள் பெரும் ஆச்சரியத்தில் மூழ்கினர்.
அனைவரும் அவரைக் கட்டி அணைத்து முத்தம் கொடுத்து ஆனந்தக்கண்ணீர் விட்டனர்.
இருபத்திமூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மகளைக் கண்ட தாய் மற்றும் அமுதவல்லியின் உறவினர்கள் நெகிழ்ந்து போய், அவரைச் சிறப்பாக அலங்கரித்து தமிழ் கலாசாரங்களை சொல்லி கொடுத்து, கேக் வெட்டி கொண்டாடினர்.
மேலும் 23 ஆண்டுகள் கழித்து தன்னை ஈன்றெடுத்த தாயாரை கண்டு அமுதவல்லி தமிழில் பேசமுடியாமல் தவித்தார்.
பாசத்திற்கு முன் பாஷை தேவையில்லை என்பதுபோல சைகையிலேயே மகளும் தாயும் தங்களின் மனதில் இருப்பதை வெளிப்படுத்தி உணர்ச்சிப் பெருக்கில் மகிழ்ந்தனர். இது காண்போரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.