சேலம்: கருங்கல்பட்டி பகுதியில் உள்ள பாண்டுரங்க நாதர் தெருவில் வசித்துவருபவர் கணேசன். இன்று (நவம்பர் 23) காலை சுமார் 6.30 மணி அளவில் இவரது வீட்டில் இருந்த சமையல் எரிவாயு உருளை பயங்கர சத்தத்துடன் வெடித்துச் (Cylinder Blast) சிதறியுள்ளது.
இதில் ஐந்து வீடுகள் இடிந்து தரைமட்டமாகியுள்ளன. இடிபாடுகளில் சிக்கி ஒருவர் உயிரிழந்தார். சிலிண்டர் வெடிப்பில் இடிபாடுகளில் சிக்கிய 10 வயது சிறுமி பூஜாஸ்ரீ உயிருடன் மீட்கப்பட்டார். 14 பேர் படுகாயமடைந்து சேலம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இடிபாடுகளில் சிக்கியுள்ள தீயணைப்பு வீரர் பத்மநாபன் (49), அவரது மனைவி தேவி (36), பக்கத்து வீட்டுச் சிறுவன் கார்த்திக்ராம் (18) ஆகியோரை மீட்கும் பணியில் தீயணைப்புத் துறையினர், காவல் துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
மேலும், இந்த சிலிண்டர் வெடிப்புக்கான காரணம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க : வாணியம்பாடி நீர் பாதை ஆக்கிரமிப்பு: வணிகர் சங்கம் பேரமைப்புப் பேரணி