சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 200க்கும் மேற்பட்ட மகளிர் சுய உதவிக் குழு பெண்கள் இன்று திரளாக வந்து மாவட்ட ஆட்சியரிடம் மோசடி புகார் ஒன்று அளித்தனர். அந்த மனுவில்," சேலம் மாவட்டத்தில் களஞ்சியம் என்ற பெயரில் 500க்கும் மேற்பட்ட சுய உதவிக் குழுக்கள் இயங்கி வருகிறது. இதில் ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் உறுப்பினராக இருக்கிறோம். எங்களுக்கு சுயதொழில் செய்வதற்காக வங்கிகள் மூலம் குறைந்த வட்டியில் கடன் வழங்கப்பட்டுவருகிறது .
இந்நிலையில் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பாக சேலத்தில் தொடங்கப்பட்ட ஏஸ் பவுண்டேசன் நிறுவனம் மகளிர் சுய உதவிக் குழு தலைவர்களின் அனுமதி இல்லாமல் பல கோடி ரூபாய் பணத்தை வங்கிகளில் துணையுடன் பரிமாற்றம் செய்துள்ளது. ஒவ்வொரு குழுவிற்கும் ஒரு லட்சம் ரூபாய் அளவுக்கு மோசடி செய்யப்பட்டுள்ளது. இதனால் இது தொடர்பாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.
இது குறித்து பத்மஸ்ரீ சின்னப்பிள்ளை கூறுகையில், “களஞ்சியம் மகளிர் சுய உதவிக் குழுவில் 240 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி நடந்திருக்கிறது. இதை மாவட்ட ஆட்சியர் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் . இல்லை என்றால் நாங்கள் தமிழ்நாடு முதலமைச்சரை நேரில் சந்தித்து எங்களது கோரிக்கையை அளிக்க உள்ளோம்" என்று தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திரண்டிருந்த 200க்கும் மேற்பட்ட மகளிர் சுய உதவிக் குழுவினரை காவல் துறையினர் கைது செய்து அழைத்துச் சென்றனர். இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
இந்த விவகாரம் தொடர்பாக ஏஸ் பவுண்டேஷனின் நிர்வாகி சிவனிடம் தொடர்பு கொண்டு கேட்டபோதுர், "மதுரையில் இயங்கிவரும் தானம் அறக்கட்டளையினர் எங்கள் சுய உதவிக் குழுவுக்கு எதிராக பெண்களை தூண்டி விடுகின்றனர். எங்கள் மீது குற்றச்சாட்டு சுமத்தி உள்ள சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த சுய உதவிக்குழு பெண்கள், எங்கள் அமைப்பிலிருந்து ஏற்கனவே மோசடி காரணமாக நீக்கப்பட்டவர்கள்” என்றார்.
இதையும் படிங்க...ஓஎன்ஜிசி எண்ணெய் குழாய் உடைந்து விவசாய நிலம் நாசம்: விவசாயி வேதனை
இந்த விவரம் முழுமையாக தெரியாமலேயே சின்னப்பிள்ளை அம்மாவும் இன்று பேட்டியளித்திருக்கிறார் .இது மிகவும் வருத்தத்திற்கு உரியது. எங்கள் அமைப்பில் எந்தவிதமான மோசடியை குளறுபடியும் குழப்பமும் நடக்கவில்லை. பெண்களின் முன்னேற்றத்துக்காக மகளிர் சுய உதவிக் குழுக்களை நடத்தி வருகிறோம்” என்று விளக்கமளித்தார்.