சேலம்: சேலம் மாவட்டம், ஆத்தூர் அடுத்த வாழப்பாடி அருகே உள்ள சிங்கிபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி மாணிக்கம்.
இவரது மகன் சத்தியானந்த். இவர் புதுடெல்லியில் தனியார் இரும்பு உருக்காலையில் பணிபுரிந்து வருகிறார்.
இவர்களுக்கு, சிங்கிபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி அருகில் விவசாயத் தோட்டம் உள்ளது.
அத்தோட்டத்தில் சத்தியானந்தின் பெற்றோர் வசித்து வருகின்றனர். இந்த தோட்டத்தில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக 20-க்கும் மேற்பட்ட சந்தன மரங்களை வளர்த்து வந்துள்ளார். தற்போது அவருக்கு விடுமுறை என்பதால் அண்மையில் டெல்லியில் இருந்து வந்த சத்தியானந்த், சொந்த ஊரில் தங்கி உள்ளார்.
நள்ளிரவில் தோட்டத்துக்குள் புகுந்த அடையாளம் தெரியாத கும்பல்
இந்த நிலையில் இவரது தோட்டத்தில் நள்ளிரவில் புகுந்த அடையாளம் தெரியாத கும்பல் நன்றாக வளர்ந்த பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பல சந்தன மரங்களை வெட்டிக் கடத்திச் சென்றுள்ளனர்.
இன்று (நவ.29) காலை தோட்டத்திற்குச் சென்ற சத்தியானந்தின் தந்தை, தோட்டத்தில் இருந்த சந்தன மரங்கள் காணாமல் போனதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
உடனே அவர் மகன் சத்தியானந்த் உடன் சென்று, அவர் வாழப்பாடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதே போல் வாழப்பாடி வனத்துறை அதிகாரிகளிடமும் புகார் செய்தார்.