சேலம்: பெரம்பலூர் மாவட்டம், ஆலந்தூர் அருகே அருணகிரி மங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் கந்தசாமி உடையார் (45). விவசாயியான இவர், சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.
அதில், “சேலம் மாவட்டம் ஆத்தூர் வீரகனூர் தனியார் பள்ளி ஒன்றில் பணியாற்றி வரும் ஆசிரியை ஷியாமளா என்பவர் எனக்கு அறிமுகமானார். அவரின் தாயார் விஜயா, சித்தி சித்ரா, தங்கை ஜீவா, அவரது கணவர் சிவக்குமார் ஆகிய 5 பேரும் கூட்டாக சேர்ந்து, பிரபல நகைக்கடையில் இருந்து குறைந்த விலைக்கு, செய் கூலி சேதாரம் இல்லாமல் தங்க நகைகள் வாங்கித் தருவதாக என்னிடம் தெரிவித்தனர்.
அதை நம்பிய நான், கடந்த பிப்ரவரி மாதம் 15ஆம் தேதி, குறைந்த விலைக்கு தங்கம் வாங்கித் தரக் கேட்டு, ரூபாய் 25 லட்சம் பணத்தை அவரிடம் கொடுத்தேன். ஆனால் தங்க நகை வாங்கித் தராமல் அவர்கள் மோசடி செய்துவிட்டனர். பலமுறை கொடுத்த பணத்தைத் திருப்பிக் கேட்டும் அவர்கள் தரவில்லை. எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுத்தர வேண்டும்” என குறிப்பிட்டிருந்தார்.
புகார் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ் உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து சேலம் ரூரல் டிஎஸ்பி இளமுருகன் தலைமையில், உதவி ஆய்வாளர் மல்லிகா மற்றும் போலீசார் விசாரித்தனர்.
அதில், பள்ளி ஆசிரியை ஷியாமளா, அவரின் தாயார் விஜயா, சித்தி சித்ரா, தங்கை ஜீவா, அவரின் கணவர் சிவக்குமார் ஆகிய 5 பேர் கும்பல், குறைந்த விலைக்கு நகை வாங்கித் தருவதாக பலரிடம் ரூபாய் 3 கோடிக்கு மேல் மோசடி செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
தொடர்ந்து, கந்தசாமியை போல மேலும் பலர் போலீசாரிடம் புகார் கொடுத்திருந்தனர். அதன் அடிப்படையில், ஆசிரியை ஷியாமளா, ஜீவா, சிவக்குமார் உள்ளிட்ட 5 பேர் மீதும் கூட்டுச்சதி, மோசடி உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து 5 பேர் கும்பலை குற்றப்பிரிவு போலீசார் தேடி வந்தனர்.
இந்நிலையில் ஆத்தூர் அருகே மஞ்சினியில் ஜீவா (33), அவரின் கணவர் சிவக்குமார் (38) ஆகிய இருவரையும் கைது செய்தனர். மேலும் ஜீவா, ஷியாமளா ஆகியோர் வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது, வீட்டில் ஒன்றரை கோடிக்கும் மேல் பண பரிமாற்றம் மற்றும் நகைகள் வாங்கியதற்கான ரசீதுகள், டைரி குறிப்புகளை போலீசார் கைப்பற்றினர்.
இதையடுத்து, கைதான தம்பதி ஜீவா, சிவக்குமார் ஆகிய 2 பேரிடமும், குற்றப்பிரிவு போலீசார் தொடர்ந்து விசாரித்து மேற்கொண்டு, பின்னர் தம்பதியை சேலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிவக்குமாரை சேலம் மத்திய சிறையிலும், ஜீவாவை பெண்கள் கிளைச் சிறையிலும் அடைத்தனர். மேலும் மோசடியில் தொடர்புடைய ஆசிரியை ஷியாமளா, அவரது தாயார் விஜயா, சித்தி சித்ரா ஆகிய 3 பேரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.