சேலம் மாவட்டத்தில் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் கரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. அதன்படி, சேலம் வீரபாண்டி சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட உத்தமசோழபுரம் பகுதியில் கரோனா சித்த மருத்துவ சிறப்பு சிகிச்சை மையத்தை ஆட்சியர் ராமன் நேற்று (ஆகஸ்ட் 3) தொடக்கி வைத்தார்.
இந்த சிகிச்சை மையத்தில் 100 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக அறிகுறிகள் ஏதும் இல்லாமலேயே நோய் தொற்று உறுதி செய்யப்பட்ட நபர்கள், முதல் நிலை பாதிப்புகள் உள்ள நபர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்க மாவட்ட சுகாதாரத் துறை திட்டமிட்டுள்ளது. அதிலும் இந்த மையத்தில் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க 50 வயதிற்குட்பட்ட மருத்துவர்கள், மருந்தாளுநர்கள், சுகாதாரப் பணியாளர்கள் என 20 நபர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மன அழுத்தத்தை போக்கும் வகையில் மருத்துவ ஆலோசனைகள், யோகா பயிற்சிகளும் வழங்கப்பட உள்ளதாகவும், தகுந்த இடைவெளிகளுடன் கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்படும் என சித்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், உணவே மருந்து; மருந்தே உணவு என்ற வகையில் நோயாளிகளுக்கு மூலிகை தேநீர், சித்தமருத்துவம், மருத்துவ குணம் சார்ந்த உணவுகள் வழங்கப்பட்டு அதன் மூலம் விரைவில் தொற்றை குணப்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.