'முல்லைக்குத் தேர் கொடுத்தான் பாரி' என்பதைப் படித்து இருக்கிறோம். ஆனால் சேலம் காவலர்கள் வாழைமரம் சாய்ந்துவிடாமலிருக்க டேபிள் தந்து பலரின் பாராட்டைப் பெற்றுள்ளனர்.
சேலம் சூரமங்கலம் பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் உள்ள காலியிடத்தில் வாழை மரங்கள் வளர்க்கப்பட்டுவருகின்றன. இந்த வாழை மரங்களுக்கு காவல் துறையினர் தினந்தோறும் தண்ணீர் ஊற்றி வளர்த்துவந்தனர். இதனால் வாழைமரங்கள் நன்றாக வளர்ந்து தற்போது காய்த்துள்ளன.
இந்நிலையில் வாழை மரம் ஒன்றில் வாழைக்காய் குலை தள்ளி சாய்ந்து கீழே விழும் நிலையில் இருந்துள்ளது. இதனைக் கண்ட காவலர்கள், காவல் நிலையத்தில் பயன்படாமல் வைத்திருந்த டேபிளை வைத்து முட்டுக்கொடுத்துள்ளனர்.
இந்த வாழை மரத்தையும், மரத்தை தாங்கிப்பிடிக்கும் டேபிளையும் காவல் நிலையத்திற்கு வரும் பொதுமக்கள் திரளாக நின்று வேடிக்கைப் பார்த்துச் செல்கிறார்கள். மேலும் வாழை மரத்திற்கு டேபிள் கொடுத்து உதவிய சூரமங்கலம் காவல் துறையினரை பலரும் பாராட்டியும் வருகிறார்கள்.
இதையும் படிங்க:தமிழ் படித்தவர்களுக்கு ஓய்வென்பதே கிடையாது'- சுகி சிவம்