கேரள மாநில வனப்பகுதியில் காவல் துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட மாவோயிஸ்ட் மணிவாசகத்தின் உடல், கடந்த நவம்பர் மாதம் 14ஆம் தேதி நள்ளிரவு, சேலம் மாவட்டம் ராமமூர்த்தி நகர் இடுகாட்டில் தகனம் செய்யப்பட்டது. இந்த நிலையில், மாவோயிஸ்ட் மணிவாசகத்தின் தங்கை லட்சுமி மற்றும் அவரது கணவர் சாலிவாகனன், இவர்களின் மகன் சுதாகர் ஆகிய மூன்று பேர் மீது சேலம் மாவட்டக் காவல் துறையினர் புதிய வழக்கு பதிவுசெய்து கைது செய்துள்ளனர்.
இதனையொட்டி, மனித உரிமை மீறலுக்கு எதிரான கூட்டமைப்பு உள்ளிட்ட அமைப்பினர், சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளனர்.
இந்த மனு தொடர்பாக ஊடகங்களுக்கு பேட்டியளித்த மனித உரிமை மீறலுக்கு எதிரான கூட்டமைப்பின் தலைவர் ராஜா, "காவல் துறையினர் திட்டமிட்டு மணிவாசகத்தின் உறவினர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். சென்ற 24ஆம் தேதி தீவட்டிப்பட்டி காவல் துறையினர் லட்சுமி மற்றும் அவரது மகன் சுதாகரை விசாரணைக்காக அழைத்துச் சென்று அன்றிரவு சிறையில் அடைத்துள்ளனர். தொடர்ந்து சாலிவாகனனையும் கைது செய்துள்ளனர். தன் சொந்த அண்ணனின் உடலைப் பெற்று அடக்கம் செய்ததற்காகவே இவர்கள் மூவரும், பொய் குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மீது வேறு எந்த வழக்கும் இல்லை, இவர்கள் அப்பாவிகள். இவர்களை காவல் துறையினர் 'உபா' என்ற கொடுமையான சட்டத்தின்கீழ் கைது செய்துள்ளனர்.
இது அப்பட்டமான மனித உரிமை மீறல். எனவே இவர்கள் மீதான வழக்கை ரத்து செய்து, இவர்களை சிறையிலிருந்து விடுவிக்குமாறு மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்திருக்கிறோம்" என்று தெரிவித்தார்.
இந்தப் பேட்டியின்போது, தமிழ் தேசிய மக்கள் முன்னணி, ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கம், புரட்சிகர இளைஞர் முன்னணி, தமிழ் கலாசார இயக்கம், மக்கள் ஜனநாயகக் குடியரசு கட்சி, தமிழ்ப் புலிகள் கட்சி உள்ளிட்ட அமைப்பின் பிரதிநிதிகள் உடனிருந்தனர்.
இதையும் படிங்க: நீலகிரி மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மாவோயிஸ்ட்!