சேலம் மாவட்டம் எடப்பாடி வட்டம் வெள்ளாளபுரம் பகுதியில் குழாய் பதிக்கும் பணிகள், துணை நீரேற்று நிலையம் கட்டுமான பணிகள் நடைபெற்றுவருவதை சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன் நேரில் பார்வையிட்டு ஆய்வுசெய்தார்.
இந்த ஆய்வின்போது சேலம் மாவட்ட ஆட்சியர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "தமிழ்நாடு முதலமைச்சர் விவசாய பெருமக்களின் நலன்கருதி மேட்டூர் அணையின் உபரிநீரை சேலம் மாவட்டத்தில் சரபங்கா வடிநிலத்தில் உள்ள வறண்ட 100 ஏரிகளுக்கு நீரேற்று மூலம் நீர் வழங்கும் திட்டம் ரூ.565 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ள ஆணையிட்டு, கடந்த மாதம் மார்ச் 4ஆம் தேதி அன்று அடிக்கல் நாட்டிவைத்தார்.
இத்திட்டத்திற்கு நில எடுப்புப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்றுவருகின்றன. ஒவ்வொரு கிராமத்திலும் எந்த நபருடைய நிலம், இத்திட்டத்திற்கு எவ்வளவு நில எடுப்பு செய்யப்பட இருக்கின்றது என்ற விவரம் அரசு இதழிலும் தினசரி உள்ளூர் நாளிதழிலும் வெளியிடப்படவுள்ளது.
இவர்களுடன் நேரடி தனியார் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு உரிய இழப்பீடு வழங்கப்படவுள்ளது. இத்திட்டத்தின்கீழ் குழாய்கள் பதிக்கப்படவுள்ள விவசாய நில உரிமையாளர்களிடம் வருவாய் கோட்டாட்சியர், வருவாய் வட்டாட்சியர்கள் மூலமாக தனித்தனியாக ஒவ்வொரு நபரிடமும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, அவ்விவசாயிகள் தங்களுக்கான இழப்பீட்டுத் தொகையினைத் பெறுவதற்கு முன்பாகவே இக்குழாய் பதிக்கும் பணிகளுக்கு முழு சம்மதம் தெரிவித்துள்ளதோடு, முழு ஒத்துழைப்பும் அளித்துவருகின்றார்கள்.
இத்திட்டத்திற்கான குழாய்கள் பதிக்கும் பணிகள் அரசு புறம்போக்கு நிலத்தில் 700 மீட்டர் நீளத்திற்கு முடிவுற்று, தற்போது தனியார் நிலத்தில் விவசாயிகளின் அனுமதியோடு குழாய் பதிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் மூலம் சேலம் மாவட்டத்தில் 8 ஊராட்சி ஒன்றியங்களிலுள்ள 12 பொதுப்பணித் துறை ஏரிகள், 1 நகராட்சி, 4 பேரூராட்சிகள், 83 ஊராட்சி ஒன்றிய ஏரிகள், குட்டைகள் என மொத்தம் 100 ஏரிகளின் பாசனப் பரப்பான 4,238 ஏக்கர் விவசாய நிலம் பயன்பெறவுள்ளது.
இதுமட்டுமல்ல, அந்த ஏரிகளில் நீர் நிரப்பப்படுகின்றபோது, அப்பகுதிகளிலுள்ள கிணறுகள், ஆழ்துளைக் கிணறுகள் ஆகியவற்றின் நிலத்தடி நீர்மட்டம் உயரும். மேட்டூர் அணையின் உபரிநீரை சேலம் மாவட்டத்தில் சரபங்கா வடிநிலத்தில் உள்ள 100 வறண்ட ஏரிகளுக்கு நீரேற்று மூலம் நீர் வழங்கும் திட்டத்தின் மூலம் வறட்சியான பகுதிகளான நங்கவள்ளி, வனவாசி, மேச்சேரி, தாரமங்கலம், எடப்பாடி, சங்ககிரி, கொங்கணாபுரம் பகுதிகளில் உள்ள ஏரிகளில் நீர் நிரப்பப்பட உள்ளது.
இத்திட்டத்திற்கான முதற்கட்ட பணியானது வருகின்ற ஜனவரி 2021-க்குள் முடிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்றுவருகின்றன. இப்பணிகள் அனைத்தும் விரைந்து முடிக்கப்பட்டு வறண்ட 100 ஏரிகளுக்கும் நீர் நிரப்பப்படும்.
இத்திட்டத்தின்கீழ் தேர்வுசெய்யப்பட்டுள்ள 100 ஏரிகளையும் சீர்படுத்தி கரைகளைச் செம்மைப்படுத்தி, ஏரி புனரமைக்கும் பணிகள் மேற்கொள்வதற்கான அரசாணை வரப்பெற்றுள்ளது. விரைவில் இப்பணிகள் தொடங்கப்பட்டு இத்திட்டத்தின்கீழ் பயன்பெறக்கூடிய 100 ஏரிகளிலும் மேம்பாட்டுப் பணிகள் நிறைவேற்றப்படும்" என்று தெரிவித்தார்.
இந்த ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் இரா. திவாகர், சங்ககிரி வருவாய் கோட்டாட்சியர் மு. அமிர்தலிங்கம், எடப்பாடி வருவாய் வட்டாட்சியர் கோவிந்தராஜன், பொதுப்பணித் துறை நீர்வள ஆதாரத் துறையின் சரபங்கா வடிநில கோட்ட உதவி பொறியாளர் ஆர். வேதநாராயணன் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசுத் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.