சேலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நேற்று இரவு சேலம் வந்திருந்தார். இன்று காலை அவர் ஓமலூரில் உள்ள புறநகர் மாவட்ட கட்சி அலுவலகத்தில் நிர்வாகிகளைச் சந்தித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”உச்ச நீதிமன்ற தீர்ப்பை வரவேற்கிறோம். உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, மாநில தேர்தல் ஆணையம் தேர்தலை நடத்தும். கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, எந்தெந்த வார்டுகளுக்கு யார் போட்டியிடுவது என்பதை முடிவு செய்து அறிவிப்போம்.
எங்களை பொறுத்தவரை இந்தத் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக கடுமையாக உழைத்து, வெற்றி பெறுவோம் என்பதில் உறுதியாக உள்ளோம். திமுக தலைவர் ஸ்டாலின் தோல்வி பயம் காரணமாக இந்தத் தேர்தலை நிறுத்த நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
தேர்தலை நிறுத்த தடை பெறுவதற்கு தொடர்ந்து முயற்சித்து வந்தார். ஆனால், உச்ச நீதிமன்றம் அதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டது. அதிமுக, கூட்டணி கட்சிகளுடன் ஒன்றாக இணைந்து உள்ளாட்சித் தேர்தலை சந்தித்து மாபெரும் வெற்றி பெறுவோம்.” என்றார்.
இதையும் படிங்க: உள்ளாட்சி தேர்தலுக்கு தடை இல்லை: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு