சேலம் மாநகரில் கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி, நள்ளிரவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள நிழற்குடைப் பகுதியில் தூங்கிக் கொண்டிருந்த முதியவர் ஒருவர் கல்லால் தாக்கி கொல்லப்பட்டார். அதனையடுத்து திருவாக்கவுண்டனூர் பைபாஸ் பகுதியில் கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி வடமாநிலத்தைச் சேர்ந்த பிச்சைக்கார முதியவர் தலையில் கல்லால் தாக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். அதேபோல கடந்த பிப்ரவரி 3ஆம் தேதி, சேலம் பழைய பேருந்து நிலையம் அருகிலுள்ள மாநகராட்சி வணிக வளாகத்தில் நள்ளிரவில் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்த முதியவர் ஒருவர் கல்லால் தாக்கிக் கொலை செய்யப்பட்டார்.
இவர்கள் மூன்று பேரும் தலையில் கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டது, சேலம் மாநகர பொதுமக்கள் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இதையடுத்து சேலம் மாநகர காவல் ஆணையாளர் செந்தில்குமார் மூன்று தனிப்படைகள் அமைத்து கொலையாளியை கைது செய்ய உத்தரவிட்டார். இதில் துணை ஆணையர் தங்கத்துரை தலைமையில் மூன்று உதவி ஆணையர்கள், மூன்று காவல் ஆய்வாளர்கள் கொண்ட தனிப்படைகள் விசாரணையைத் துரிதப்படுத்தியது. இவர்கள் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை செய்து வந்தனர்.
மேலும், கொலை நடந்த இடத்தில் உள்ள சி.சி.டி.வி. பதிவு காட்சிகளைக் கொண்டு விசாரணை மேற்கொண்டதில், இளைஞர் ஒருவர் நள்ளிரவில் வருவதும், பின்னர் பெரிய கல் ஒன்றைத் தூக்கி வந்து முதியவர்களைத் தாக்கி, கொன்று விட்டு அவர்களிடம் இருந்து பணம், சில்லறைக் காசுகளை திருடிச் செல்வதும் தெரியவந்தது.
இந்த இளைஞர் யார் என சேலம் மாநகரம் முழுவதும் தீவிர விசாரணை நடந்தது. சி.சி.டி.வி. காட்சிகளில் பதிவான உருவம் கொண்ட இளைஞர் ஒருவரை காவல் துறையினர் பிடித்து விசாரணை நடத்தி வந்தனர்.
அவனிடம் நடத்திய விசாரணையில், அந்த இளைஞர் முன்னுக்குப்பின் முரணாகத் தகவல்களைத் தெரிவித்து வந்தார். முதலில் கல்லால் தாக்கி கொலை செய்தது தான் தான் என்றும், பிறகு தான் கொலை செய்யவில்லை என்றும் தெரிவித்து வந்ததால் தனிப்படை காவல் துறையினர் குழப்பத்தில் ஆழ்ந்தனர். இந்நிலையில் சி.சி.டி.வி. காட்சிகளில் இருந்த இளைஞரின் அடையாளங்களையும், பிடிபட்ட இளைஞரின் புகைப்படங்களையும் பெங்களூருவில் உள்ள தடயவியல் பிரிவில் ஒப்பிட்டு பார்க்க அனுப்பி வைக்கப்பட்டது.
அதில், சிசிடிவி காட்சிகளையும், இளைஞரின் புகைப்படத்தையும் வைத்து இரண்டு காட்சிகளிலும் உள்ளது ஒருவர் தான் என தகவல் தெரிவித்தனர், தடயவியல் துறையினர். இதையடுத்து மூன்று கொலைகளையும் செய்தது பிடிபட்ட இளைஞர் என உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அந்த இளைஞரைக் கைது செய்த சூரமங்கலம் காவல்துறையினர் கொலைக்கான காரணங்கள் குறித்து விசாரணையை மேற்கொண்டனர்.
காவல்துறையின் முதற்காட்ட விசாரணையில், அந்த இளைஞர் திண்டுக்கல் மாவட்டம் சித்தேரியூர் கிராமத்தைச் சேர்ந்த எம்.ஆண்டிசாமி (21) என்பதும், கஞ்சா போதைப் பழக்கத்திற்கு அடிமையான அவர், திண்டுக்கல்லில் இருந்தபோது கஞ்சா புகைத்துவிட்டு ரகளையில் ஈடுபட்டதும், அவரது உறவினர்கள் அவரை வீட்டை விட்டு வெளியேற்றியதும் தெரியவந்தது.
இதையடுத்து சேலத்திற்கு வந்து தங்கி பிச்சைக்காரர்களை கல்லால் தாக்கி,கொலை செய்து, அவர்களிடம் இருந்த பணத்தைத் திருடி, அந்தப் பணத்தில் கஞ்சா வாங்கி உபயோகித்து வந்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து கைது செய்யப்பட்ட அந்த இளைஞரை சேலம் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சொத்துக்காக அண்ணன், அண்ணியை கொலைசெய்தவர் கைது