சேலம் மாவட்டம் சின்னக்கொல்லப்பட்டி பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் செயல்பாட்டை தொடங்கி வைத்து பேசிய மாநகர காவல் ஆணையாளர் செந்தில்குமார், சென்னைக்கு அடுத்தபடியாக சேலத்தில்தான் பெரும்பான்மையான பகுதிகள் கண்காணிப்பு கேமராக்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு, குற்றச்செயல்கள் தடுக்கப்பட்டுள்ளது. இதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தரவேண்டும் என்றார்.
மேலும் அவர், கண்காணிப்பு கேமராக்கள் மூன்றாவது கண்ணைப் போன்றது, நாம் தூங்கினாலும் கேமராக்கள் தூங்காது. அன்னை இந்திரா நகர் பகுதியில் 25 கண்காணிப்பு கேமராக்களும், சேலம் மாநகரின் முக்கிய பகுதிகளில் 250 கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டு காவல்துறை கட்டுப்பாட்டு அறையின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ளன. இதன் காரணமாக குற்றங்கள் நடந்தாலும் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டு விரைந்து கைது செய்யப்படுவார்கள் என தெரிவித்தார்.
இந்த விழாவில் சேலம் மாநகர காவல் துணை ஆணையாளர் தங்கதுரை, அதிமுக அஸ்தம்பட்டி பகுதி கழக செயலாளர் கே ஆர் எஸ் சரவணன் மற்றும் அன்னை இந்திரா குடியிருப்போர் நல சங்கத்தின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.