சேலம்: பருவ மழை காலங்களில் பெய்யும் மழை நீரை சேமித்து வைத்து பாசனம் மற்றும் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக 1934-ஆம் ஆண்டு காவிரியின் குறுக்கே மேட்டூர் அணை கட்டி முடிக்கப்பட்டது. மேட்டூர் அணையிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12-ஆம் தேதி காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறப்பது வழக்கம்.
இதன் மூலம் டெல்டா மாவட்ட பாசன பகுதிகளான சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், தஞ்சாவூர், திருச்சி, திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட 12 மாவட்டங்கள் பயனடையும். அணையின் நீர் இருப்பை பொறுத்து ஜூன் மாதம் 12-ஆம் தேதிக்கு முன்னதாகவோ அல்லது தாமதமாகவோ அணையில் இருந்து பாசன தேவைக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.
இவ்வாறு திறக்கப்படும் தண்ணீர் குறுவை, சம்பா, தாளடி ஆகிய முப்போக பாசன தேவைக்காக ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் 28-ஆம் தேதி வரை தொடர்ந்து வழங்கப்படும். இதையடுத்து அணையில் இருந்து தண்ணீர் திறப்பது நிறுத்தப்படும். அதன் பிறகு ஒரு சில நாட்களுக்கு டெல்டா மாவட்ட மக்களின் குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 2 ஆயிரம் கன அடி நீர் வீதம் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படும்.
இதே போன்று சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்டங்களைச் சேர்ந்த கால்வாய் பாசன விவசாயிகளின் தேவைக்காக ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் 1-ஆம் தேதி அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும். இவ்வாறு திறக்கப்படும் தண்ணீர் தொடர்ந்து 137 நாட்களுக்கு வழங்கப்படும்.
இந்த நிலையில் இந்த ஆண்டு பருவ மழை தவறிய போதிலும் தமிழக மற்றும் கர்நாடக அரசுகள் இடையே காவிரி நீரை பங்கீடு செய்வதில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பை வழங்கியது. அந்த தீர்ப்பின்படி ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் முதல் மே மாதம் வரை 177.25 டிஎம்சி தண்ணீரை மாதம் தோறும் பிரித்து வழங்க வேண்டும் என்று உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் ஜூன் மாதம் முதல் அக்டோபர் 10-ஆம் தேதி வரை கர்நாடகம் 28 டிஎம்சி தண்ணீர் மட்டுமே தமிழகத்திற்கு கொடுத்துள்ளது. அந்த காலகட்டத்திலேயே வழங்கப்பட வேண்டிய தண்ணீரில் 46.9 டிஎம்சி தண்ணீர் இன்னும் கர்நாடகத்திலிருந்து தமிழகத்துக்கு பகிர்ந்து அளிக்கப்படவில்லை.
இந்த ஆண்டு தென்மேற்குப் பருவ மழை கை கொடுக்கவில்லை. அது மட்டுமல்லாமல் கர்நாடகமும் தமிழகத்திற்கு உரிய தண்ணீரை வழங்காததால் டெல்டா பாசன தேவையை முழுமையாக பூர்த்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அணையின் நீர் இருப்பு எட்டு டிஎம்சி-யாக குறைந்துள்ளதால் ஜனவரி 28-ஆம் தேதி வரை டெல்டா பாசன விவசாயிகளுக்கு தண்ணீர் வழங்க முடியாத நிலை ஏற்பட்டு விட்டது.
அதாவது சுமார் 110 நாட்களுக்கு முன்னதாகவே அணையிலிருந்து பாசன தேவைக்கு தண்ணீர் திறப்பது இன்று முதல் நிறுத்தப்படுகிறது. இதனால் டெல்டா மாவட்ட விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். மேட்டூர் அணையின் மொத்த கொள்ளளவு 93.5 டிஎம்சி. நேற்றைய நிலவரப்படி அணையின் நீர் இருப்பு எட்டு டிஎம்சி-யாக இருந்தது.
அணைக்கு வினாடிக்கு 122 கன அடி நீர் வந்து கொண்டிருந்தது. அணையின் நீர்மட்டம் 31.30 அடியாக குறைந்து இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்று மதியம் முதல் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டு விட்டது. அணையின் மேற்கு மற்றும் கிழக்குக்கரை கால்வாய் வழியாக குடிநீர் தேவைக்காக மட்டும் 700 கன அடி நீர் திறக்கப்படுகிறது.