சேலம்: சட்டமேதை டாக்டர் அம்பேத்கரின் பிறந்தநாள், நேற்று (ஏப்ரல் 14) உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. அந்த வகையில், சேலத்தில் நடைபெற்ற அம்பேத்கர் பிறந்தநாள் விழாவின்போது, முன் அனுமதி பெறாமல் கட்சி பேனர்களை வைத்ததற்காகவும், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக செயல்பட்டதற்காகவும் பல்வேறு தரப்பினர் மீது 13 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சேலம் மாநகர காவல் துறை தெரிவித்துள்ளது. மேலும், இது தொடர்பாக சேலம் மாநகர காவல் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “சேலம் மாநகரம் கிச்சிப்பாளையம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பச்சப்பட்டி ஆரம்பப் பள்ளி மற்றும் பச்சப்பட்டி மெயின் ரோடு, மாரியம்மன் கோயில் அருகில் விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்தவர்கள், முன் அனுமதி இன்றி பொது இடத்தில் தங்கள் கட்சி பேனர்களை வைத்த குற்றத்திற்காக 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அதேபோல், அஸ்தம்பட்டி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட அஸ்தம்பட்டி ரவுண்டானா, காந்தி ரோடு, சுந்தர்ராஜ் சந்திப்பு, காந்தி ரோடு முதல் சுந்தரராஜ் சந்திப்பு வரை ஆகிய பகுதிகளில் விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்தவர்கள், முன் அனுமதி இன்றி பொது இடத்தில் தங்கள் கட்சி பேனர்களை வைத்ததற்காகவும், சட்ட விரோதமாக ஒன்று கூடி முழக்கங்களை எழுப்பி போக்குவரத்திற்கு இடையூறு செய்ததற்காகவும், அப்போது பாதுகாப்பு நடவடிக்கைகள் எதுவும் இன்றி,
ஒரு கிரேன் வாகனத்தின் மூலம் சுமார் 200 கிலோ எடை உள்ள மலர் மாலையை, டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் சிலைக்கு அணிவித்தபோது போக்குவரத்து நெரிசல் ஏற்படுத்தியதோடு, ஒரே ரதத்தில் இரண்டு குதிரைகளை துன்புறுத்தும் வகையில் சாரட்டு வண்டியில் கட்டிக் கொண்டு, முழக்கங்கள் எழுப்பிக் கொண்டு ஊர்வலமாக வந்து, போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்திய குற்றங்களுக்காக, சம்பந்தப்பட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மீது 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மேலும், கொண்டலாம்பட்டி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கல்லாங்காடு முதல் உத்தமசோழபுரம் பைபாஸ் செல்லும் வழியிலும், அழகாபுரம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட தாட்கோ காலனி அருகிலும் பாஜகவின் எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவுவைச் சேர்ந்தவர்கள் முன் அனுமதி இன்றி, பொது இடத்தில் தங்கள் கட்சி பேனர்களை வைத்த குற்றத்திற்காக இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அதேநேரம், சேலம் மாநகரம் செவ்வாய் பேட்டை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட புலிக் குத்தி சந்திப்பில், தமிழ்ப்புலிகள் கட்சியைச் சேர்ந்தவர்கள் முன் அனுமதி இன்றி, பொது இடத்தில் தங்களது கட்சி பேனர்களை வைத்த குற்றத்திற்காக 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தேனியில் அம்பேத்கர் பிறந்தநாள் விழாவில் கலவரம்.. வாகனங்களுக்கு தீ வைப்பு, போலீசார் மீது தாக்குதல்.. 40 பேர் கைது!