சேலம்: தர்மபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டியில் உள்ள பாரத மாதா சிலைக்குக் கடந்த 11ஆம் தேதி மாலை அணிவிக்க பாஜக மாநில துணைத்தலைவர் கே.பி. ராமலிங்கம் சென்றார். அப்பொழுது மணிமண்டபம் பூட்டப்பட்டிருந்தது.
இதனையடுத்து பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து பாரத மாதா சிலைக்கு மாலை அணிவித்தார். இந்நிலையில், நினைவு மண்டபம் மேலாளர் அளித்தப்புகாரின் பேரில் பாஜக மாநில துணைத்தலைவர் கே.பி. ராமலிங்கம், பாஜக தர்மபுரி மாவட்ட செயலாளர் உள்ளிட்ட 50 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் உள்ள கே.பி. ராமலிங்கம் அவரது வீட்டில் கைது செய்யப்பட்டார். முன்னதாக அவரை மருத்துவப் பரிசோதனைக்கு தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபொழுது தனக்கு ரத்த அழுத்தம் இருப்பதாகவும் நெஞ்சு வலி இருப்பதாகவும் கூறினார்.
இதனையடுத்து, மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், பென்னாகரம் மேஜிஸ்திரேட் பிரவீனா சேலம் அரசு மருத்துவமனைக்கு கடந்த திங்கட்கிழமை வந்தார்.
அப்பொழுது கே.பி. ராமலிங்கத்தின் உடல்நிலை குறித்து கேட்டறிந்து அவருக்கு 15 நாள் நீதிமன்றக் காவலுக்கு உத்தரவிட்டு, ஆகஸ்ட் 29ஆம் தேதி நீதிமன்றக் காவலில் அடைக்க உத்தரவிட்டார். இதனைத்தொடர்ந்து சேலம் அரசு மருத்துவமனையில் நீதிமன்ற காவலர்கள் பாதுகாப்பில் சிகிச்சைப் பெற்று வந்தார்.
இந்நிலையில், இன்று(மே 18) சேலம் அரசு மருத்துவமனையில் இருந்து சேலம் மத்திய சிறைக்கு அழைத்துச்செல்வதற்காக கே.பி. ராமலிங்கம் அழைத்துவரப்பட்டார். அப்பொழுது ’தனக்கு உடல்நிலை சரியாகவில்லை; தன்னை விட்டுவிடுங்கள்’ என்று பாஜக மாநில துணைத்தலைவர் கே.பி. ராமலிங்கம் கதறி அழுததாக கூறப்படுகிறது.
பின், ஸ்ட்ரக்சரில் வைத்து கே.பி.ராமலிங்கம் தள்ளிவரப்பட்டு, இதைத்தொடர்ந்து சிறைத்துறை அலுவலர்கள் அவரை சேலம் மத்திய சிறையில் அவரை அடைத்தனர். இதனால் சேலத்தில் பெரும் பரபரப்பு நிலவியது.
இதையும் படிங்க: பிரியாணியில் புழு எதிரொலியாக பிரபல உணவகத்தில் உணவுப்பாதுகாப்புத்துறை அலுவலர் சோதனை