சேலம் மாவட்ட பாஜக அலுவலகத்தில் இன்று நரசிம்மன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர், புதிய குடியுரிமை சட்டத்தால் சிறுபான்மை மக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்று மத்திய உள்துறை அமைச்சரும், பிரதமரும் உறுதிபட கூறுகின்றனர். அப்படி இருந்தும் தமிழ்நாட்டில் சிறுபான்மை மக்களை சிஏஏக்கு எதிராக போராடும்படி திமுக தூண்டிவிடுகிறது. இதன்மூலம் திமுக அரசியல் ஆதாயம் தேட முயற்சி செய்கிறது. அது ஒருபோதும் பலிக்காது என்று தெரிவித்தார்.
மேலும் அவர், இந்தியாவில் எந்த ஒரு இஸ்லாமியரும் தொழில் நடத்தவும், வாழவும் கூடாது என்று பாஜக ஒருபோதும் கூறவில்லை. தமிழ்நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தி குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளது. பாதிப்பு இல்லை என்றபோதும் புதிய குடியுரிமை சட்டத்திற்கு எதிராக இஸ்லாமிய மக்களை எதிர்க்கட்சிகள் போராடத் தூண்டுகின்றனர். இதனை வன்மையாக பாஜக கண்டிக்கிறது என்றும் நரசிம்மன் கூறினார்.