சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள கிழக்கு காவேரிபுரம் கிராம மக்கள், தோறும் இறைச்சி தேவைக்காகவும், விற்பனைக்கும் தங்களது வீடுகளில் கோழிகளை வளர்த்துவருகின்றனர்.
இந்நிலையில், இன்று (ஜன. 20) காலை, கிழக்கு காவேரி புரம் பகுதிகளில், கோழிகள் ஆங்காங்கே சந்தேகமான முறையில் இறந்து கிடந்தன. இதனையடுத்து பறவை காய்ச்சல் காரணமாக கோழிகள் இறந்திருக்கலாம் என அச்சமடைந்த கிராம மக்கள், மேட்டூர் அரசு கால்நடை மருத்துவருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலின் பேரில் கால்நடை மருத்துவக் குழுவினர் கிழக்கு காவேரி புரம் கிராமத்திற்கு சென்று, இறந்துபோன கோழிகளை சேகரித்து உடற்கூராய்வுக்கு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இது தொடர்பாக சேலம் மண்டல கால்நடை பராமரிப்பு துறை இணை இயக்குநர் புருஷோத்தமன் கூறுகையில், “கிழக்கு காவேரி புரம் பகுதிகளில் கோழிகள் இறந்து போன விவகாரம் குறித்து ஆய்வு நடந்து வருகிறது. அந்தக் கோழிகளுக்கு வழங்கிய உணவில் ஏதாவது பிரச்னையா என்பது குறித்தும், வேறு எதுவும் நோய்த்தாக்கம் காரணமா அல்லது பறவை காய்ச்சல் காரணமா என்பது குறித்தும் கால்நடைத்துறை மருத்துவர்கள் சோதித்து வருகின்றனர்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க...குட்கா முறைகேடு வழக்கு: முன்னாள் அமைச்சர் ரமணா உள்பட 30 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்