சேலம் மாவட்டம் சூரமங்கலத்திலுள்ள போக்குவரத்து பிரிவில், காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருபவர் ராஜசேகர். இந்நிலையில் இவர் இன்று சூரமங்கலம் அருகிலுள்ள ஏ.வி.ஆர். ரவுண்டானா பகுதியில் போக்குவரத்து ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.
அப்போது அங்கு இரு சக்கர வாகனத்தில் வந்த ஜீவா நகரைச் சேர்ந்த சுரேஷ் பாபு (45) என்பவர், சாலையில் நடுவே நின்று செல்போனில் பேசிவுள்ளார். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதித்துள்ளது. இதைப்பார்த்த காவல் உதவி ஆய்வாளர், அவரிடம் சாலையின் ஓரம் சென்று பேசுமாறு கூறிவுள்ளார்..
இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது திடீரென சுரேஷ் பாபு, போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளரை கன்னத்தில் அறைந்து விட்டு, அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். சுரேஷ்பாபு தாக்கியதால் காயமடைந்த காவல் உதவி ஆய்வாளரைஅப்பகுதி பொதுமக்கள் மீட்டு, சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
பின்னர் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளரை தாக்கிய சுரேஷ்பாபுவின் மீது தகாத வார்த்தைகளால் திட்டுவது மற்றும் அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், தாக்குதல் ,கொலை மிரட்டல் விடுத்தல் ஆகிய நான்கு பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்த சூரமங்கலம் காவல்துறையினர், தலைமறைவாகவுள்ள சுரேஷ் பாபுவை வலைவீசி தேடி வருகிறார்கள்.
மேலும் காவல்துறை மேற்கொண்ட விசாரணையில், காவலரை தாக்கிய சுரேஷ் பாபு என்பவர் சேலம் மணல் லாரி உரிமையாளர் சங்க செயலாளர் கண்ணையன் என்பவரது மகன் என்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து சுரேஷ் பாபுவை கைது செய்ய 2 தனிப்படை அமைத்து காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.