1986ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் கருணாநிதியால் சேலம் மாவட்டம் ஆத்தூர் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள பெரியார் சிலை திறந்துவைக்கப்பட்டது. அதன்பின்னர், குறித்த பெரியார் சிலையைச் சுற்றி இரும்புக் கம்பி வேலிகள் அமைத்து, அந்த வேலிகளைச் சுற்றிலும் பெரியாரின் பொன்மொழிகளை எழுதி திராவிடர் கழகத்தின் சார்பில் பராமரித்துவருகின்றனர். இதில், பகுத்தறிவு சிந்தனைகளைத் தூண்டும் அவரது பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்டிருந்தன.
இந்நிலையில் இன்று பெரியார் சிலையை சுற்றி அமைக்கப்பட்டிருக்கும் கல்வெட்டு பலகையில் எழுதி வைக்கப்பட்டிருந்த பெரியாரின் பொன்மொழிகள் மீது அடையாளம் தெரியாதவர்கள் காவிச்சாயத்தை பூசிவிட்டு சென்றுள்ளார்கள்.
இது குறித்து தகவலறிந்த திராவிடர் கழகத்தினரும் திமுகவின் நிர்வாகிகளும் பெரியாரின் சிலையை பார்வையிட்டு பெரியாரின் பொன்மொழி எழுத்துகளில் காவிச்சாயத்தைப் பூசியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஆத்தூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.
![Anti-social antics painted over Periyars statue](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-slm-01-periyar-statue-pic-vis-script-7204525_22022020221740_2202f_1582390060_949.jpg)
இது தொடர்பில் ஆத்தூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து காவிச்சாயத்தைப் பூசியவர்கள் குறித்து விசாரணை செய்துவருகின்றனர். இச்சம்பவத்தை அடுத்து சேலத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பெரியார் சிலைகளுக்கு காவல் துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : முஸ்லீம்களை தனிமை படுத்த விடமாட்டோம்- திருமாவளவன்