சேலம் மாநகராட்சியில் மூன்று இடங்களில் சார் பதிவாளர் அலுவலகம் இயங்கிவருகிறது. முகூர்த்த நாள்கள், அமாவாசை தினங்களில் அதிகப்படியான பத்திரப்பதிவு நடைபெறுவது வழக்கம். நேற்று அமாவாசை என்பதால் சேலத்தில் உள்ள அனைத்து சார் பதிவாளர் அலுவலகங்களிலும் பத்திரப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது.
இந்நிலையில், சூரமங்கலம் சார்பதிவாளர் அலுவலகத்தில் நேற்று மாலை திடீரென நுழைந்த லஞ்ச ஒழிப்புத் துறையினர், அங்கு விடிய விடிய அதிரடி சோதனை மேற்கொண்டனர். இதில், கணக்கில் வராத இரண்டு லட்சத்து 53 ஆயிரம் ரூபாய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது .
இது தொடர்பாக சார் பதிவாளர் கனகராஜ், அலுவலக ஊழியர்கள் மீது வழக்குப்பதிவு செய்த லஞ்ச ஒழிப்புத் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.