ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் இன்றுமுதல் நவம்பர் 2 வரை கடைப்பிடிக்கப்படுகிறது. இதனையொட்டி அரசு, பொதுத் துறை அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்கள் உறுதிமொழி எடுத்து இந்த வாரத்தை அனுசரிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் சேலம் சூரமங்கலம் பகுதியில் உள்ள ரயில்வே மெய்ல் சர்வீஸ் அலுவலக ஊழியர்கள் சார்பாக சிறப்பு விழிப்புணர்வு வாரம் அனுசரிக்கப்படுகிறது. இதன் தொடக்க விழா எளிமையாகத் தொடங்கியது. பொது வாழ்க்கையில் நேர்மையை ஊக்குவிப்பதோடு, லஞ்சம் வாங்கவோ, கொடுக்கவோ கூடாது என ஊழியர்களால் உறுதிமொழி எடுக்கப்பட்டது.
இதேபோல் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் ராமன் தலைமையில் இன்று நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் கூடுதல் இயக்குநர்/திட்ட இயக்குநர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை நா. அருள்ஜோதி அரசன், மாவட்ட வருவாய் அலுவலர் இரா. திவாகர், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) என். தமிழரசன் உள்பட அனைத்துத் துறை அலுவலர்கள், பணியாளர்கள் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் தலைமையேற்று ஊழல் தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழியான “நமது நாட்டின் பொருளாதாரம், அரசியல், சமூக முன்னேற்றத்திற்கு ஊழல் ஒரு முக்கிய தடையாக உள்ளதாக நான் நம்புகிறேன். அரசு, குடிமக்கள், தனியார் நிறுவனங்கள் ஆகியவை ஊழலை ஒழிக்க ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.
நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் எப்போதும் உயர்ந்த நோக்குடன் விழிப்புணர்வு, நேர்மை, கண்ணியம் ஆகியவற்றுடன் ஊழலை ஒழிப்பதில் உறுதுணையாக விளங்க வேண்டும் என்பதை நான் நன்கறிவேன்.
எனவே, நான் அனைத்துச் செயல்களிலும் நேர்மையையும், சட்ட விதிகளையும் பின்பற்றுவேன் என்றும், லஞ்சம் வாங்கவோ அல்லது கொடுக்கவோ மாட்டேன் என்றும், அனைத்துச் செயல்களையும் நேர்மை, வெளிப்படைத் தன்மையுடன் செயல்படுத்துவேன் என்றும், பொது மக்களின் நலனுக்காகப் பணியாற்றுவேன் என்றும், தனிப்பட்ட நடத்தையில் நேர்மையை வெளிப்படுத்துவதில் ஒரு முன்னுதாரணமாகச் செயல்படுவேன் என்றும், ஊழல் தொடர்பான நிகழ்வினை உரிய அதிகார அமைப்பிற்குத் தெரியப்படுத்துவேன் என்றும் உறுதி கூறுகிறேன்'' என்ற உறுதிமொழியினை வாசிக்க அனைத்துத் துறை அலுவலர்கள், பணியாளர்கள் உள்ளிட்ட அனைவரும் பின்தொடர்ந்து வாசித்து உறுதிமொழியினை ஏற்றுக்கொண்டனர்.
இதையும் படிங்க: தனியார் மருத்துவமனையில் கூலித் தொழிலாளி சந்தேக மரணம்: உறவினர்கள் போராட்டம்