கோவிட் 19 பெருந்தொற்றை கட்டுக்குள் கொண்டுவர பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன. இதன் ஒரு பகுதியாக, சேலம் மாவட்டத்தையொட்டிய, கர்நாடக மாநிலத்தின் எல்லைப்பகுதியான காரைக்காடு மதுவிலக்குச் சோதனைச் சாவடியில் வாகனங்களுக்கு மருந்து தெளிக்கும் பணி நடைபெற்றது. அதனை மாவட்ட ஆட்சியர் சி.அ. ராமன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வுக்கு பிறகு மாவட்ட ஆட்சியர் பேசியதாவது:
தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்படி, சேலம் மாவட்டத்தில் கோவிட் 19 பெருந்தொற்று நோய் தடுப்பு, பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முழுமையாக மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
அந்த வகையில், சேலம் மாவட்டம், கர்நாடகா மாநிலம் எல்லைப் பகுதியான கொளத்தூர் ஊராட்சி ஒன்றியம், காவேரிபுரம் ஊராட்சி, காரைக்காடு சோதனைச் சாவடியில் மருந்து தெளிக்கும் பணிகள் நடைபெறுகின்றன.
தமிழ்நாட்டிற்கு கர்நாடக மாநிலத்திலிருந்து வரும் பேருந்துகள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களுக்கும் நோய் தடுப்பு மருந்து தெளிக்கும் பணி, கொசு ஒழிப்பு பணியாளர்கள், தூய்மைக் காவலர்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டுவருகிறது.
வாகனங்களில் வரும் அனைத்து நபர்களையும் மருத்துவக் குழுவினர் காய்ச்சல் கண்டறியும் கருவியின் மூலம் பரிசோதனை செய்வர்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதைப் போல, சேலம் மாவட்டம், ஓமலூரில் உள்ள சுங்கச்சாவடியில் நடைபெறும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஆய்வுசெய்யப்பட்டன. குறிப்பாக, அண்டை மாநிலங்களிலிருந்து வரும் ஆம்னி பேருந்துகள் தீவிர ஆய்வுக்கு உள்படுத்தப்படுகின்றன.
இந்த ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் திவாகர், மேட்டூர் சார் ஆட்சியர் சரவணன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) என். கோபிநாத் ஆகியோர் உடனிருந்தனர்.
இதையும் படிங்க: கரோனா எதிரொலி: சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம் ரயில் நிலையங்களில் பிளாட்பார்ம் டிக்கெட் அதிரடி உயர்வு!