சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள பூசாரிப்பட்டி காத்தான்கொட்டாய் பகுதியில் வைக்கோல் லாரியிலிருந்து ரேஷன் அரிசி மூட்டைகளை மற்றொரு வாகனத்தில் மாற்றி கடத்தல் நடைபெறுவதாக தீவட்டிப்பட்டி காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது.
இதைத் தொடர்ந்து இவர்களைப் பிடிக்க காவல் துறையினர் விரைந்து வந்தனர். அப்போது வைக்கோல் லாரியிலிருந்து அரிசி மூட்டைகளை மற்றொரு லாரியில் மாற்றிக்கொண்டிருந்ததைக் கண்டுபிடித்தனர். காவல் துறையினரைப் பார்த்தவுடன் அங்கிருந்த ஓட்டுநர்கள் தப்பியோடினர். இரண்டு லாரிகளைப் பறிமுதல் செய்து சோதனை செய்ததில் ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
பின்னர் உணவுக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஆய்வாளர் கோபி விரைந்து வந்து ஆய்வுசெய்தார். அப்போது லாரியில் 6 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசி மூட்டைகள் இருந்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து இரண்டு லாரிகளையும் அரிசி மூட்டைகளையும் பறிமுதல் செய்தனர்.
கடத்தப்பட்ட லாரிகளில் பல்வேறு மாநிலங்களில் நம்பர் பிளேட்டுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. கடத்தல்காரர்கள் ஒவ்வொரு மாநிலங்களுக்கும் செல்லும்போது அந்தந்த மாநில நம்பர் பிளேட்டுகளை மாற்றி கடத்தி ரேஷன் அரிசி விற்பனை செய்வது தெரியவந்தது. மேலும் இதுகுறித்து காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.