சேலம் ரயில்வே கோட்டத்திற்குட்பட்ட சேலம், கரூர், ஈரோடு, திருப்பூர், மேட்டுப்பாளையம் ஆகிய ஐந்து முக்கிய ரயில் நிலையங்கள் ஐஎஸ்ஓ:14001:2015 (சுற்றுச்சூழல் மேலாண்மைத் திட்டம்) தரச்சான்றிதழ் பெற்றுள்ளது. சேலம் ரயில்வே கோட்டத்தில், ரயில்வே வாரியத்தால் அடையாளம் காணப்பட்ட ஏ1, ஏ அந்தஸ்து பெற்றுள்ள ரயில் நிலையங்கள் அனைத்தும் ஐஎஸ்ஓ 14001 தரச்சான்றிதழ் பெற்றிருக்கிறது.
தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவின்படி ரயில்வே வாரியம் அந்தந்த மண்டல ரயில்வே துறைகளுக்கு 24 வழிகாட்டுதல்களை பின்பற்றிட அறிவுறுத்தியது. அந்த வகையில் சேலம் உள்ளிட்ட ஐந்து ரயில் நிலையங்கள் ஐஎஸ்ஓ தரச் சான்றினை பெற்றுள்ளன.
அதில் அனைத்து நிலையங்களின் நீர் பயன்பாடு குறித்து தணிக்கை செய்தல், மறுசுழற்சி, மழை நீர் சேகரிப்பு மூலம் நீர் பயன்பாட்டை குறைத்திடுதல், மின்சார சிக்கனத்தை வலியுறுத்தும் வகையில் எல்.இ.டி. பொருத்துதல், பி.எல்.டி.சி. மின்விசிறிகள், சூரியஒளி மின்சாரம், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் மூலம் மக்கும்-மக்காத கழிவுகளை முறையாக கையாளுதல், ரயில் நிலையங்களில் அனைத்து நடைமேடைகளிலும் மக்கும்-மக்காத குப்பைக் கழிவுகளை சேகரிக்க பல வண்ண தொட்டிகளை வைத்திடுதல், ரயில் நிலையத்தை சுத்தமாக வைத்திருத்தல் ஆகிய அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு தரச்சான்று வழங்கப்பட்டுள்ளது.
நீர் மறுசுழற்சி முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதன் மூலம், நாள்தோறும் சேலம் ரயில்வே கோட்டத்திற்குட்பட்ட ரயில் நிலையங்களில் எட்டு லட்சம் லிட்டர் தண்ணீர் மறுசுழற்சி செய்யப்படுகிறது. மேலும் சேலம் போடி நாயக்கன்பட்டி பகுதியில் ரயில்வே நிலத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறு பாலத்தினை பயன்படுத்த மாநகராட்சி நிர்வாகம் ரூ.2.2 கோடி வழங்கிய பின்னர் அந்தப் பாலம் பயன்பாட்டுக்கு வரவுள்ளது.
இது குறித்து சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் சுப்பாராவ் இது குறித்து பேசுகையில், "சேலம் ரயில்வே கோட்டம் கடந்தாண்டை விட தற்போதைய பருவத்தில் 31 விழுக்காடு கூடுதல் வருவாய் ஈட்டியுள்ளது. இதுவரை ஒட்டு மொத்தமாக ரூ.303 கோடியும், பயணச்சீட்டின் வாயிலாக ரூ.197 கோடியும் வருவாய் கிடைத்துள்ளது.
திடீர் சோதனைகள் மூலம் பயணச்சீட்டு எடுக்காமல் பயணித்த ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோரிடமிருந்து ரூ.4.72 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. மேலும் சேலம் ரயில்வே கோட்டத்திற்குட்பட்ட அனைத்து ரயில் நிலையங்களிலும் 800 இடங்களில் சிசிடிவி கேமராக்கள் வைக்கப்படும். தற்போது 32 ரயில் நிலையங்களில் இலவச வைபை வசதியுள்ளது. மேலும், 28 ரயில் நிலையங்களுக்கும் இலவச வைபை வசதி விரிவுபடுத்தப்படும்" என்றார் அவர்.