சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் நீர் மேலாண்மை திட்டத்தின் கீழ் பல்வேறு நடவடிக்கைகளை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டுவருகிறது.
அதன்படி, மரம் நடுதல் குறித்து பொதுமக்களுக்கு விளக்குவதோடு மட்டுமல்லாமல் மாநகராட்சிக்கு சொந்தமான இடங்களில் அனைவரும் அதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
இதன் பகுதியாக, இன்று சேலம் மாநகராட்சிக்குட்பட்ட அம்மாபேட்டை மண்டல தம்மம்பட்டி பகுதியில் 12 ஆயிரம் சதுர அடி பரப்பளவு இடம் தேர்வு செய்யப்பட்டு, அதில் இரண்டாயிரம் மரக்கன்றுகள் நடும் பணி தொடங்கப்பட்டது.
முதற்கட்டமாக ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணியை தேசிய பேரிடர் மேலாண்மை குழுவின் தலைவரும், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் கொள்கை மற்றும் திட்ட இணைச் செயலாளருமான திருப்புகழ் தொடங்கிவைத்தார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சேலம் மாநகராட்சி ஆணையர் சதீஷ், "இந்த நகர் பணத்தில் சீதா, மாதுளை, தேக்கு, சிசு மரக்கன்று என பல்வேறு வகையான மரக்கன்றுகள் நடப்பட்டன. குறைந்த நிலப்பரப்பில் நாம் பாரம்பரிய மரங்களை நடுவதால் அதிகபட்சமான கரியமில வாயுவை உள்வாங்கி ஆக்ஸிஜனை வாயு மண்டலத்தில் விடுவிக்கும், மழைநீரை அடர்ந்த வனங்களில் சேமிப்பது போல் நகர்ப்புறங்களில் மழைநீரை சேமித்திட முடியும். மேலும் காற்றின் ஈரப்பதம் குறையாமல் பாதுகாக்கப்படும்.
நகர்ப்புற குணங்களில் வைக்கப்படும் நாட்டு மரங்களுக்கு அதிக இடைவெளி தேவையில்லை என்பதால் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இதுபோன்று ’மரம்’ எனும் திட்டத்தின் கீழ் 40 ஆயிரம் மரக்கன்றுகள் நடுவதற்கு திட்டமிட்டுள்ளோம்" என்றார்.