கரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவலை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் மே 31ஆம் தேதிவரை ஊரடங்கு தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதனால் அனைத்து தொழில் நிறுவனங்களும் தற்போது மூடப்பட்டுள்ளன. அதன் காரணமாக வட மாநிலத் தொழிலாளர்கள் வேலை வாய்ப்புகளை இழந்து வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்ட சூழ்நிலையில் தவித்து வருகின்றனர்.
இதைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் தங்கி பணிபுரிந்து வரும் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்ப தொடங்கி உள்ளனர்.
அந்தவகையில் சேலத்திலிருந்து ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த 347 பேர் சிறப்பு ரயிலில் கடந்த செவ்வாய்க்கிழமை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் உத்தரப் பிரதேச மாநிலம் அக்பர்பூருக்கு 82 குழந்தைகள் உள்பட ஆயிரத்து 401 பேர் தனி ரயிலில் நேற்றிரவு 8.30 மணிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதில் கோவையிலிருந்து சேலம் வழியாக மத்தியப் பிரதேசம் ரேவா பகுதிக்கு சென்ற ரயிலில் சேலத்திலிருந்து 415 பேர் நேற்று இரவு 10.30 மணிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
சேலத்தில் இருந்து 201 பேரும், கள்ளக்குறிச்சி மாவட்டத்திலிருந்து 36 பேரும், பெரம்பலூர் மாவட்டத்திலிருந்து 51 பேரும், விழுப்புரம் மாவட்டத்திலிருந்து 127 பேரும் அடங்குவர்.
அந்தவகையில் இரு ரயில்களில் சேலம் மாவட்டத்திலிருந்து மொத்தம் 1,816 பேர் நேற்று இரவு சிறப்பு ரயில்கள் மூலம் அவர்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர் என மாவட்ட அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: சொந்த ஊருக்கு செல்ல கோவையில் காத்திருக்கும் வட மாநில மக்கள்!