சேலம் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சுகவனேசுவரர் கோயிலில் கும்பாபிஷேகம் நடத்த கோயில் நிர்வாகத்தினரால் திட்டமிடப்பட்டு, கடந்த 2018ஆம் ஆண்டு பாலாலயம் செய்யப்பட்டது. அதன் பின் பல்வேறு காரணங்களால் கும்பாபிஷேக விழா நடைபெறாமல் இருந்தது. இதினிடையே ராஜ கோபுரம், பரிவார சுவாமிகளின் சன்னதிகளின் விமானங்கள், கோயிலின் தரைதளம் சீரமைப்பு, சுற்றுச்சுவர் சீரமைப்புப் பணிகள் உள்பட ரூ.1 கோடி மதிப்பில் செய்யப்பட்டன.
சுகவனேசுவரர் கோயில் திருப்பணிகள் நிறைவுற்ற நிலையில் சென்ற செப்.1 ஆம் தேதி முதல் கும்பாபிஷேக விழா தொடங்கியது. தினமும் ஐந்து காலை பூஜைகள் நிறைவடைந்த நிலையில் நேற்று அதிகாலை 4 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, சோம கும்ப பூஜை, ஆறாம் கால பரிவார சுவாமிகளுக்கு யாக பூஜை நடந்தது. காலை 6 மணிக்கு அனைத்து பரிவார கலசங்கள் புறப்பாடு, காலை 6.30 மணிக்கு அனைத்து பரிவார மூர்த்திகளுக்கும் குடமுழுக்கு, காலை 9.30 மணிக்கு அனைத்து விமானங்கள், ராஜகோபுரங்கள், மூலஸ்தான சுவாமி, அம்மன், விநாயகர், சுப்பிரமணியர் கலசங்கள் புறப்பாடு நடைபெற்றது.
தொடர்ந்து காலை 10.50 மணிக்கு அனைத்து விமானங்கள், அனைத்து ராஜகோபுரங்களுக்கு சமகால குடமுழுக்கும், காலை 11.15 மணிக்கு சுகவனேசுவரர்-சொர்ணாம்பிகை அம்மனுக்கு மகா குடமுழுக்கு நடைபெற்று, அதைத்தொடர்ந்து மகாதீபாராதனை நடத்தி, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. மாலை 4 மணிக்கு சொர்ணாம்பிகை, சுகவனேசுவரர் சுவாமிக்கு திருக்கல்யாணமும், மாலை 6 மணிக்கு பஞ்ச மூர்த்திகள் திருவீதி உலாவும் வெகு விமர்சையாக நடந்தது.

இந்த கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு நூற்றுக்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள் , சைவத் திருமுறைகள் ஓதி வழிபாடு நடத்தினர். இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் மேயர் ஆ.ராமச்சந்திரன், எம்.எல்.ஏ. ஆர்.ராஜேந்திரன், இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதையும் படிங்க:TODAY HOROSCOPE : செப்டம்பர் 8 ராசிபலன் - உங்க ராசிக்கு எப்படி?