ராணிப்பேட்டை: ஓச்சேரியை அடுத்த மாமண்டூர் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் திருவண்ணாமலை மாவட்டம் பிரம்மதேசம் பாலாற்றுப் பகுதியில் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது, எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக நீர்வரத்து அதிகரித்து ஆற்றின் நடுவே இளைஞர்கள் சிக்கிக் கொண்டனர்.
இது குறித்து காவல் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, தீயணைப்புத் துறையினரும், அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்புப்படை மேலாண்மை நிலையத்திலிருந்து 20 பேர் கொண்ட குழுவினரும் வரவழைக்கப்பட்டனர்.
இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன், ராணிப்பேட்டை காவல் கண்காணிப்பாளர் தீபா சத்யன், தமிழ்நாடு கைத்தறி துணிநூல் துறை அமைச்சர் காந்தி ஆகியோர் நேரில் சென்று மீட்புப் பணியைத் துரிதப்படுத்தினர்.
தேசிய பேரிடர் மீட்புப்படை வீரர்கள், ராணிப்பேட்டை காவல் துறையினர், வருவாய்த் துறையினர், ராணிப்பேட்டை செய்யாறு ஆகிய இரண்டு மாவட்டங்களைச் சேர்ந்த தீயணைப்புத் துறையினர் ஆகியோர் ஆற்று வெள்ளத்தில் சிக்கிய இளைஞர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
இளைஞர்களை மீட்கும் பணியில் தொடர்ந்து படகின் உதவியுடன் இளைஞர்களை மீட்கச் சென்ற தேசிய பேரிடர் மீட்புப் படையினர் சுமார் நான்கு மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு மாமண்டூர் பகுதியைச் சேர்ந்த நந்தகுமார், சின்ராசு, அமுதவன், விஸ்வநாதன், சுபாஷ், கோகுல், ரமேஷ் ஆகிய ஏழு பேரைப் பத்திரமாக மீட்டனர்.
இதையும் படிங்க: நெல்லையில் தொடர் மழை: பாபநாசம் அணையிலிருந்து தாமிரபரணி ஆற்றில் நீர் திறப்பு