ராணிப்பேட்டை: அரக்கோணம் அருகே காரும் தனியார் நிறுவனத்தின் பேருந்தும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த தந்தை, மகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த ஆறு பேர் காரில் காஞ்சிபுரம் வந்தனர். அங்கு கோயில்களில் சாமி தரிசனம் முடித்துவிட்டு இன்று (ஜூலை 28) மீண்டும் திருப்பதி நோக்கி புறப்பட்டனர்.
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த சேந்தமங்கலம் பெட்ரோல் பங்க் அருகில் வரும்போது எதிரே வந்த தனியார் நிறுவனத்தின் ஊழியர்களை ஏற்றிச்செல்லும் பேருந்து, கார் மீது நேருக்கு நேர் மோதியது. இதில் கார் அப்பளம் போல் நொறுங்கியது.
இதனை அடுத்து, அருகில் இருந்தவர்கள் காவல் துறையினருக்கு விபத்து குறித்து தகவல் கொடுத்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, இந்த விபத்தில் காரில் பயணம் செய்த ஆறுபேரில் இருவர் உயிரிழந்ததும், நான்கு பேர் படுகாயம் அடைந்ததும் தெரியவந்தது. உடனடியாக, விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
மேலும் காவல் துறையினரின் முதல்கட்ட விசாரனையில், விபத்துக்குள்ளான காரில் பயணம் செய்த ஆறுபேரும் தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தை அடுத்த நிஜாமுதீனைச் சேர்ந்தவர்கள் என்பதும், வெங்கட ரெட்டி (55) மற்றும் அவரது இளைய மகன் அவிநாஷ் வெங்கட ரெட்டி(20) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததும்; மேலும் காரில் இருந்த நரசிங் ரெட்டி (42 ), ரமேஷ் ரெட்டி (40), கங்காதர் ரெட்டி (45) மற்றும் ஒரு வாலிபர் என நான்கு பேரும் படுகாயம் அடைந்தனர் என்பதும் தெரிய வந்துள்ளது.
விபத்தில் படுகாயம் அடைந்த 4 பேரும் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், பேருந்தில் இருந்த தனியார் நிறுவனத்தின் பெண் ஊழியர்கள் 10 பேர் லேசான காயமடைந்துள்ளனர்.
இந்த விபத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், இந்த விபத்து குறித்து நெமிலி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பாமக தலைவர் அன்புமணி கைது எதிரொலி: திருப்பத்தூர் மாவட்டத்தில் டயரை கொளுத்தி சாலை மறியல்!