அரக்கோணம் அடுத்த சோகனூரில் கடந்த ஏப்ரல் ஏழாம் தேதி இரவு இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட மோதலில் சோகனூரை சேர்ந்த சூர்யா, அர்ஜுன் ஆகிய இரு இளைஞர்கள் கொலை செய்யப்பட்டனர். இதனைக் கண்டித்தும், சாதிவெறியர்களையும், மணல் கொள்ளையர்களையும் கைது செய்ய வலியுறுத்தியும் விசிக தலைவரும் மக்களவை உறுப்பினருமான திருமாவளவன் தலைமையில் ராணிப்பேட்டை முத்துக்கடை பேருந்து நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. இதில் சுமார் 500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் பேசிய திருமாவளவன், ”குருவரஜபேட்டைக்கு தனியாக கடைக்கு சென்ற அப்பு என்கிற ஐய்யப்பனைத்தான் முதலில் சாதி வெறி கும்பல் தாக்கியுள்ளது. பின்னர் சமாதானம் பேச அழைத்து பாட்டில், கம்பியால் சரமாரியாக குத்தி கொலை செய்துள்ளார்கள். படுகொலை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடும், உள்நோக்கத்தோடும் இச்சம்பவம் நடந்தேறியுள்ளது. விசிக ஒரு வன்முறை கட்சி என்ற தோற்றத்தை உருவாக்குகிறார்கள். அரக்கோணத்தில் உயிரிழந்தவர்கள் ஒன்றும் விசிகவினர் அல்ல, போதை பழக்கத்திற்கு ஆளானவர்களும் அல்ல.
பாமக ஏமாற்றுகிறது:
பாமகவினர் அவர்களை நம்பும் சமுதாயத்தினரை ஏமாற்றிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், ஒருநாள் அவர்களே முச்சந்தியில் நிற்க வைத்து அடிப்பார்கள். விசிக அனைத்து தரப்பு மக்களின் ஆதரவையும் பெற்று வெற்றி பெற வேண்டும் என்பதே எங்களது நோக்கம். அரசியல் சுய லாபத்திற்காக பாஜகவிற்கு ஆதரவு தெரிவிக்கிறது பாமக. ஆபத்தான தீய சக்தி பாஜகவுடன் ஒருவன் கூட்டு வைக்கிறான் என்றால் அவன் சமூகவிரோதி.
அரசியல் நேர்மை இல்லாத கட்சி பாஜக. பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு வழங்கக்கூடாது என இந்தியா முழுவதும் வன்முறையை இயற்றிய ஒரே கட்சி பாஜக. இப்படியான கட்சியுடன் எப்படி பாமக ராமதாஸ், எடப்பாடி கூட்டணி வைத்தார்கள்.
வன்முறையை தூண்டுவது பாமகதான்:
அரசியலை வைத்து திட்டமிட்டு வன்முறை தூண்டுவது பாமகதான். பாமக வன்முறை கட்சி என்று ஜெயலலிதாவே சட்டப்பேரவையில் ஒருமுறை கூறினார். பாஜகவினர் தங்களை இந்து காவலர்கள் என்று கூறுகின்றனர் அந்த இந்து காவலர்கள் எனும் வெங்காயங்கள் அரக்கோணம் விவகாரத்தில் எங்கே போனார்கள். அரக்கோணத்தில் உயிரிழந்தது கிறிஸ்தவரோ, இஸ்லாமியரோ அல்ல. எங்காவது தலித் மக்களுக்காக பாஜக போராடியுள்ளதா?
ராமதாஸால் முடியுமா:
இந்த படுகொலையை கண்டித்து திமுக, மமக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. ஆனால் பாமக இதுவரை எந்த ஒரு அறிக்கையும் விடவில்லை. எங்களுக்கும் இந்த படுகொலைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என ஈவு இரக்கம் கொண்ட ராமதாஸ் அறிக்கை வெளியிட முடியுமா.
வன்கொடுமை சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தாத மாநிலம் தமிழ்நாடுதான். நிவாரணம் வழங்காத மாநிலமும் இதுதான். கொல்லப்பட்ட இளைஞர்கள், சோகனூர் வழியாக நடைபெறும் மணல் கொள்ளையை தடுத்து கேட்டிருக்கிறார்கள். இதுவே இந்த பிரச்னைக்கு முதல் காரணம். பானை சின்னத்திற்கு வாக்கு கேட்டது இரண்டாவது காரணம்” என்றார்.