ராணிப்பேட்டை: அரக்கோணத்தில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். நெடுஞ்சாலைத் துறையினர் எதையும் கண்டு கொள்ளாமல் இருப்பது வாகன ஓட்டிகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அரக்கோணம் - சோளிங்கர் ரோட்டில் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான தார் சாலையில் நேற்று (ஆக.29) திடீரென 2 அடி ஆழத்திற்கு பள்ளம் ஏற்பட்டுள்ளது.
பள்ளம் ஏற்பட்ட பகுதியானது சிறிய வளைவான பகுதியாகும் இதனால் அரக்கோணம் பேருந்து நிலையத்திலிருந்து திருவள்ளூர் மார்க்கமாக செல்லும் பேருந்துகள் இந்த சாலையில் செல்வதில் மிகுந்த சிரமம் ஏற்பட்டது. காலை நேரத்தில் பள்ளி, கல்லூரி, அலுவலகம் செல்வோர் கடும் அச்சத்துடன் பயணம் செய்வதாக வேதனை தெரிவித்தனர்.
அதேபோல், திருத்தணியில் இருந்து அரக்கோணம் பேருந்து நிலையம் வழியாக காஞ்சிபுரம், வேலூர் மார்க்கமாக செல்லும் பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்களும் இந்த சாலையைக் கடந்து செல்ல வேண்டி உள்ளது. சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
மேலும், அரக்கோணத்தில் மிக முக்கிய சாலையாக இருப்பதால் நெடுஞ்சாலைத் துறையினர் தற்காலிகமாக கூட சீரமைக்காமல் இருந்தது வாகன ஓட்டிகளிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்த சாலையில் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான வாகனங்களில் லட்சக்கணக்கானோர் பயணிப்பதாக அரக்கோணம் பகுதி மக்கள் கூறுகின்றனர்.
இந்த சாலையானது கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட அண்டை மாநிலங்களை இணைக்கும் பிரதான சாலையாக இருப்பதால் விபத்துகள் நடப்பதற்கு முன்னதாக சரி செய்ய வேண்டுமென நெடுஞ்சாலை மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கு பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படிங்க:தமிழகத்திற்கு 5,000 கனஅடி நீர் திறக்க உத்தரவு.. காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் அதிரடி முடிவு!