ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் கள்ளச்சாராய விற்பனை மற்றும் டாஸ்மாக் மதுவை, கள்ளச்சந்தையில் விற்பவர்கள் கண்டறியப்பட்டால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் வளர்மதி IAS எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. அதிகபட்சமாக 108° பாரன்ஹீட் வரை வெப்பம் பதிவாகும் சூழலில், வெயிலின் தாக்கத்திலிருந்து சமாளிக்கும் நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சியர் வளர்மதி, அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இந்தக் கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் மாவட்ட ஆட்சியர் வளர்மதி IAS பேசியதாவது, “ராணிப்பேட்டை மாவட்டத்தில் தோல் தொழிற்சாலைகள் அதிகமாக உள்ளதால், வெயில் நேரங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு தண்ணீர், எலுமிச்சை சாறு, மோர் ஆகியவற்றை வழங்குவதோடு மருத்துவ உதவிகளை வழங்க தேவையான ஏற்பாடுகளை தயார் நிலையில் வைக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மேலும் பகல் நேரங்களில் பணியாற்றும் ஊழியர்களை சுழற்சி முறையில் பணியாற்ற வைப்பதோடு, வெயில் நேரங்களில் இடைவெளி கால அளவை அதிகரிக்க தொழிற்சாலை நிர்வாகங்களுக்கு உத்தரவிட்டுள்ளதாக” தெரிவித்தார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் கள்ளச்சாராயம் மற்றும் கள்ளச்சந்தையில் டாஸ்மாக் மது, கள் விற்பனை செய்வது கண்டறியப்பட்டால், அத்தகைய செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரித்து உள்ளார். கள்ளச்சாராய விற்பனையைத் தடுக்க பொதுமக்கள் 10581 என்ற எண்ணைத் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் எனவும், அதனைத் தடுக்க பல்வேறு விதமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், குறிப்பாக மாவட்ட எல்லைகளில் கண்காணிப்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் மதியம் 12 மணி முதல் 3 மணி வரை பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வருவதைத் தவிர்க்க வேண்டும் எனவும், குறிப்பாக கர்ப்பிணிகள், வயது முதிர்ந்தவர்கள், குழந்தைகள், உயர் ரத்த அழுத்தம், உடல்நலக்குறைபாடு உள்ளவர்கள் வெளியே வர வேண்டாம் எனவும் வேண்டுகோள் விடுத்து உள்ளார்.
இதையும் படிங்க: தூத்துக்குடி மக்களின் போராட்டத்திற்கு நிச்சயம் வெற்றி கிடைக்கும் - கனிமொழி எம்.பி.