ராணிப்பேட்டை: அரக்கோணத்தை அடுத்த சோகனூர் கிராமத்தில் கடந்த ஏப்ரல் 7 ஆம் தேதி இருவேறு சமூகத்திற்கு இடையே ஏற்பட்ட மோதலில் அர்சுனன் (23), சூர்யா (26) ஆகியோர் உயிரிழந்தனர். மூவர் காயமுற்றனர். தமிழ்நாட்டில் மிகப்பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து அரக்கோணம் தாலுகா காவல் துறையினர் விசாரித்தனர். இந்த கொலையில் தொடர்புடைய 11 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் 7 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் நடைபெற்று சுமார் ஐந்து மாதங்கள் ஆன நிலையில், உண்மை அறியும் குழு அறிக்கை வெளியிட்டுள்ளது. மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தைச் சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவர்கள் மற்றும் பல்வேறு இயக்கங்களை சேர்ந்த வழக்கறிஞர்கள் அடங்கிய 10 பேர் கொண்ட குழுவினர் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.
இதுகுறித்து மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் சென்னை கிளை செயலாளர் ஜிம்ராஜ் மில்டன் கூறுகையில், "காவல் துறையினர் விரைந்து நடவடிக்கை எடுத்து இந்த கொலை வழக்கில் தொடர்புடையவர்களை கைது செய்துள்ளனர். சாதிய மனப்பான்மை மனிதாபிமானமற்ற தன்மையை ஏற்படுத்துகிறது. சாதியை எண்ணம் உடைய மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த அறிக்கை வெளியாகியுள்ளது.
நாம் அனைவரும் ஒரு தாய் மக்கள் உறவுகளே, நாம் சாதியப் பாகுபாடு பார்க்கக் கூடாது என்பதனை பள்ளியில் சொல்லித் தர வேண்டும்.
பொதுவாக எஸ்சி, எஸ்டி சட்டத்தின் கீழ் பதியப்பட்ட வழக்குகளின் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தவுடன் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க வேண்டும். அவர்களுடைய குடும்பத்தினரில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். ஆனால், இதுவரை இந்த அரக்கோணம் இரட்டை கொலை வழக்கில் பாதிக்கப்பட்டவர்களுக்கு எதுவும் கொடுக்கப்படவில்லை" என்றார்.
இதையும் படிங்க: சாவித்திரி பாய் புலே பிறந்த தினத்தில் ஆசிரியர் தினம் கொண்டாட கோரிக்கை!