ராணிப்பேட்டை: தமிழ்நாடு முழுவதும் ரயில் நிலையங்களில் பணம், நகை மற்றும் போதைப்பொருள்கள் அதிகளவில் கடத்தப்பட்டு வருகின்றன. அதை தடுக்க தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் நேற்று (ஜனவரி 23) அரக்கோணம் ரயில் நிலையத்தில் காவல் ஆய்வாளர் விஜயலட்சுமி தலைமையிலான காவலர்கள் அதிகாரிகளுடன் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, மும்பையில் இருந்து அரக்கோணம் வழியாக சென்னை சென்ற ரயில் 1ஆவது நடைமேடைக்கு வந்தது. அந்த ரயிலில் இருந்து வந்த ஒரு நபர் கையில் பையுடன் இறங்கி நடந்து சென்றார். சந்தேகத்தின் பேரில் காவலர்கள் அவரை பிடித்து, அவர் கொண்டு வந்த பையில் சோதனை மேற்கொண்ட போது, அதில் ரூ.47 லட்சத்து 26 ஆயிரம் இருப்பது தெரிய வந்தது.
இந்த பணத்துக்கான உரிய ஆவணம் அவரிடம் கேட்டபோது அவர் விழித்துள்ளார். இதனால் பணத்தை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். விசாரணையில், அந்த நபர் ஆந்திர மாநிலம் கடப்பாவை சேர்ந்த ஜலீன் (44) என்பது தெரியவந்தது. பின்னர் பறிமுதல் செய்த பணத்தை ரயில்வே காவல் துறையினர் சென்னை வருமான வரித்துறை புனலாய்வு பிரிவு ஆய்வாளர் பாலசந்திரனிடம் ஒப்படைத்ததாக ரயில்வே காவல்துறையினர் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: தென்காசியில் செயற்கை நீர்வீழ்ச்சிகள் உருவாக்கப்பட்டுள்ளதா? - நீதிமன்றம் கேள்வி