ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த பள்ளூர் காலணியை சேர்ந்தவர் கௌதம்(28). இவர் சென்னை புறநகர் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணி புரிந்து வந்தார்.
இந்நிலையில் நேற்று (ஜூன். 20) மதியம் கௌதம் மற்றும் நண்பர்கள் அதே பகுதியில் உள்ள ஆனந்தராஜ் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் அமர்ந்து மது அருந்தியதாக கூறப்படுகிறது.
அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாகி உள்ளது. போதையில் ஏற்பட்ட தகராறில் கௌதம் தலை, கழுத்தின் பின்பகுதி, காலில் வெட்டப்பட்டு கொல்லப்பட்டுள்ளார். உடனிருந்தவர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர்.
இதனையடுத்து அங்கு சென்ற நெமிலி காவல்துறையினர் கௌதமின் உடலை கைப்பற்றி உடற்கூராய்விற்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சம்பவ இடத்தை ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா நேரில் பார்வையிட்டு குற்றவாளிகளை விரைந்து பிடிக்க காவல்துறையினருக்கு உத்தரவிட்டார்.