ராணிப்பேட்டை: மிக்ஜாம் புயல் காரணமாக கடந்த 2 நாட்களாகச் சென்னையில் மற்றும் பிற வட மாவட்டங்களில் அதி கனமழை பெய்தது. இதனால், பல்வேறு ஏரிகள் மற்றும் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகச் சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்ததுள்ளது.
அந்த நிலையில், ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி மற்றும் அதனைச் சுற்றி உள்ள பனப்பாக்கம், சேந்தமங்கலம், கீழ் வீதி உள்ளிட்ட பகுதிகளில் தொடர் கனமழை பெய்தது. இதனால் மாவட்டத்தில் உள்ள அனைத்து நீர் நிலைகளும் நிரம்பியுள்ளது. மேலும், நெமிலியில் உள்ள கொசஸ்தலை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும், நெமிலி அருகே புதிதாக கட்டப்பட்டுள்ள தடுப்பணையில் நீரானது நிரம்பி வழிகிறது.
இந்நிலையில், தடுப்பணையில் பாதுகாப்பு வளையங்கள் ஏதும் இல்லாததால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள், இளைஞர்கள் ஆகியோர் ஆபத்தை உணராமல் கொசஸ்தலை ஆற்றில் குளித்து வருகின்றனர். இதனால் உடனடியாக சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்து உள்ளனர்.
இதையும் படிங்க: தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி? ராகுல் காந்தி தேர்வு என்ன?